‘பிகினி’ ஆடை அணியாதீர் – பொலிஸாரின் அறிவித்ததால் பெரும் சர்ச்சை!

இலங்கை கலாசாரத்திற்கேற்ற ஆடையை அணியவும் என்ற அறிவித்தல் பலகை, சமூக வலைத்தளங்களில் எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டு வைரலாகியது.

கடற்கரையோரத்தில் அணிய வேண்டிய ஆடை குறித்து தென் இலங்கையின் ஹபராதுவ பிரதேசத்தில் சமூகப் போலீஸ் பிரிவினால் அறிவித்தல் வைக்கப்பட்டிருந்தது. எனினும், அறிவித்தல் பலகையை உடன் அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

”தற்போதே இதுகுறித்து எனக்கு அறியக்கிடைத்தது. உடனடியாக அதனை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளேன்,” என்று அரச நிர்வாக, சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார  தெரிவித்தார்.

”இலங்கையின் கலாசாரத்திற்கு ஏற்ற ஆடை அணியவும்” என்று ஹபராதுவ பிரதேசத்தில் போலீசாரின் சமூகப் பிரிவால் வைக்கப்பட்ட அறிவித்தல் பலகை கூறுகிறது.

”பிகினி” ஆடையுடன் இரண்டு வெளிநாட்டுப் பெண்களின் படங்கள் பொறிக்கப்பட்டு, இந்த ஆடைகள் ”பொருத்தமற்றவை” என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது

இந்த விளம்பரப் பலகை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த அறிவித்தல் பலகையை விமர்சித்தே அதிகமான கருத்துகள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டப்பட்டுள்ளன.

ஆடைகள் குறித்து மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் இறுக்கமான சட்ட திட்டங்களையும், ஹபராதுவ சமூக போலீஸாரின் இந்த விளம்பரப் பலகையையும் ஒப்பிட்டு ஒருவர் கருத்துப் பதிவு செய்திருந்தார்.

பேஸ்புக் தளத்தில் ஒருவரின் பதிவில் ”வரைபடத்தில் தொலைவில் இருந்தாலும், சௌதி அரேபியாவிற்கு நாம் நெருக்கமானவர்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

”வெளவாலின் வீட்டிற்கு வந்தால் தலைகீழ் தொங்கியிரு! – சமய போலீஸ், சிலோன்” என்று குறித்த அறிவித்தலைப் பகிர்ந்துள்ள இன்னமொருவர் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை சுற்றுலா அபிவித்தி அதிகார சபையின் ட்விட்டர் செய்தியில், ஹபராதுவ சமூக போலீஸாரின் இந்த விளம்பரப் பலகை குறித்து கவனம் செலுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அழகிய கடற்கரையை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆடைகள் குறித்த சட்டதிட்டங்களை அமல்படுத்தும் போலீஸ் தேவையில்லை,” எனவும், தமது நிறுவனம் இதுகுறித்து உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அந்த ட்விட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் செயற்படுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் பலகை குறித்து ஊடக, நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் கவனத்திற்கு வந்ததாகவும், இதுகுறித்து அரச நிர்வாக, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு அறிவித்துள்ளதாகவும் அரச செய்திப் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்சன குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் கேட்டபோது, ”கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குட்டையாக அணியாமல், வேறு எவ்வாறு அணிவது,” என்று கேட்டார்.

எனினும், இலங்கையில் பெண்களின் உடைகள் குறித்து அறிவிப்பு வெளியாவது இது முதன்முறையல்ல.

தாய்மார்கள் பாடசாலைக்குள் நுழையும்போது, அணிந்திருக்க வேண்டிய ஆடைகள் குறித்து பரிந்துரைக்கும் விளம்பரப் பலகையொன்று 2016ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றுக்கு வெளியே காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த விளம்பரமும் அப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகியிருந்தது.

பாடசாலைக்குள் நுழையும் பெண்கள் அணிய வேண்டிய, தவிர்க்க வேண்டிய ஆடைகள் குறித்து இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *