‘பொய்களை ஜோடிக்கிறார் ‘கோமாளி இளவரசர்’- ராகுல் காந்தி மீது அருண் ஜேட்லி கடும் தாக்கு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொய்களை ஜோடித்து பேசுகிறார், தான் ஒருபோதும் நிரவ் மோடியை சந்தித்து இல்லை, அவர் நாட்டைவிட்டுத் தப்பிக்க உதவி செய்யவும் இல்லை என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். அதில் முக்கியமானது, வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் தப்பிச்சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, கடைசியாக அருண் ஜேட்லியைச் சந்தித்துவிட்டுச் சென்றார் என்றும், வைரவியாபாரி நிரவ் மோடியும், ஜேட்லியைச் சந்தித்துவிட்டு நாட்டை விட்டுதப்பினார் என்றும் குற்றச்சாட்டு வைத்தார்.

இதற்கு பதில் அளித்து அருண் ஜேட்லி இன்று தனது பேஸ்புக்கில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு பொய்களை இட்டுக்கட்டிப் பேசுகிறார். ராகுல் காந்தி கூறுவதுபோல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து தப்பிச் சென்ற வைரவியாபாரி நிரவ் மோடியை நான் என் வாழ்வில் சந்தித்தது இல்லை. நான் நாடாளுமன்றத்தில் அவரைச் சந்தித்ததாக ராகுல் குற்றம்சாட்டுகிறார். அப்படியென்றால், நாடாளுமன்றத்தில் உள்ள வரவேற்பறை பதிவேட்டில் நிச்சயம் நிரவ் மோடியின் பெயர் இருக்கும் அதைச் சோதனை செய்து கொள்ளலாம்.

நான் விஜய் மல்லையாவை நாடாளுமன்றத்தில் சந்தித்தேன் என்றும், அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் போது, என்னிடம் தகவல் தெரிவித்துவிட்டுத் தப்பினார் அதற்கு நான் உதவினேன் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நான் விஜய் மல்லையாவிடம் பேசியதாக ராகுல் காந்தி கூறும் அனைத்துக் குற்றச்சாட்டும் பொய்யானவை. விஜய் மல்லையாவின் அனைத்து கோரிக்கைகளையும் நான் எப்போதும் செவிமெடுத்துக் கேட்டதில்லை.

எப்படியெல்லாம் பொய்களை இட்டுக்கட்டி ராகுல் காந்தி கூறுகிறார். இதேபோன்றுதான் இந்துஸ்தான் மாநாட்டிலும் ராகுல்காந்தி கேள்விகளைக் கேட்டு குற்றச்சாட்டு வைத்தார். ஆனால், யூகங்களுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது எனத் தெரிவித்துவிட்டேன்.

கோமாளி இளவரசர் தொடர்ந்து பொய்களைக் கூறுகிறார். ராகுல் காந்திக்கு ஆளுமை தொடர்பான சிக்கல் ஏதேனும் இருந்தால், ஒரு டஜன் பொய்களை தொடர்ந்து சொல்வதால், அது உண்மையாகிவிடும் என்று உள்ளூர நம்புகிறார். இதுதான் கோமாளி இளவரசரின் பிரச்சினையாக இருக்கிறது.

ஜிஎஸ்டி வரி, வாராக்கடன் மற்றும் கடன் தள்ளுபடி குறித்து ராகுல் காந்தி கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. காங்கிரஸ் அரசு ஆட்சியை விட்டு அகலும்போது, நாட்டில் 2 செல்போன் தயாரிக்கும் நிறுவனங்கள் இருந்தன, ஆனால், இப்போது 120 நிறுவனங்களாக உயர்த்தியுள்ளோம்.

காலணிகள் உற்பத்தித்துறை மந்தமாகிவிட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டுகிறார், ஆனால், ஆண்டுதோறும் ரூ.20 ஆயிரம் கோடிக்கு காலணிகள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு ஜேட்லி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *