இடைக்கால அரசமைப்பது தற்கொலைக்கு நிகரான செயல்! – மஹிந்த மீது ஆனந்த தேரர் பாய்ச்சல்

இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முற்படுவாரானால் அது தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதற்குச் சமனான செயலாகும் என்று நாராஹேன்பிட்டிய அபயராம விகாரையின் விகாராதிபதி முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, இடைக்கால மேற்பார்வை அரசொன்றை அமைக்கும் யோசனை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இடைக்கால அரசமைப்பது பற்றி அரசியல் களத்தில் பேச்சு அடிபடுகின்றது. இந்த விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷவும் தொடர்புபடவேண்டும் எனப் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், மஹிந்த ராஜபக்ஷ இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு முயற்சிப்பாராயின் அது தற்கொலை செய்து கொள்வதற்கு நிகரான செயலாகும்.

இடைக்கால அரசமைப்பதால் நாட்டில் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. டொலரின் பெறுமதி குறைவடைந்து, ரூபா எழுச்சிபெறப் போவதில்லை.

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த அரசு பழிவாங்கும் படலத்தை முன்னெடுத்தது. மக்கள் விரக்தியின் உச்சக்கட்டத்தில் இருக்கின்றனர். ஆகவே, இடைக்கால அரசு அமைக்கும் யோசனை பொருத்தமற்றது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *