சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க மக்கள் போராட்டங்களே அவசியம்! – தாமும் ஒத்துழைக்கத் தயார் என்கிறார் அமைச்சர் மனோ

“திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறல்கள், வனவளத் திணைக்களத்தின் அத்துமீறல்கள் மற்றும் ஏனைய அத்துமீறல்கள் தொடர்பில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டங்களை நடத்துவதன் ஊடாகவே தீர்வைக் காணலாம். நாங்களும் இந்த அத்துமீறல்களுக்கு எதிராகத் தொடர்ந்து பேசியே வருகின்றோம்.”

– இவ்வாறு தெரிவித்தார் தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்றுத் தாம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் ,

“அண்மையில் ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் இணைந்து நானும் இந்த விடயம் தொடர்பாகப் பேசியிருந்தேன். இதனடிப்படையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளை அழைத்துக் கூட்டங்களை நடத்துமாறு ஜனாதிபதி வடக்கு – கிழக்கு மாகாண ஆளுநர்களுக்கு உத்தரவு வழங்கியிருந்தார்.

இந்தக் கூட்டங்கள் நடத்தப்படும்போது அது தொடர்பான விடயங்கள் பூரணமாக வெளிப்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் உள்ளன.

மேலும், தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளரைச் சந்தித்துப் பேசியபோது, வடக்கில் பல இடங்களில் பெளத்த மத அடையாளங்கள் காணப்படுகின்றன என அவர் என்னிடம் கூறினார்.

பெளத்த மதம் சிங்கள மக்களுக்கு மட்டும் உரியதல்ல. தமிழ் பெளத்தர்களும் வாழ்ந்தார்கள். ஆகவே, அந்த இடங்கள் தமிழ் மக்களுக்குச் சொந்தமானவை என நான் அவரிடம் கூறினேன்.

முல்லைத்தீவில் ஆய்வு நடத்தச் சென்றபோது பெளத்த பிக்கு ஒருவரை அழைத்துச் சென்றமை பாரிய தவறு எனக் கூறியிருந்தேன். அதனை அவர் ஏற்றுக்கொண்டார். இனிமேல் அவ்வாறான தலையீடுகள் இருக்காது எனக் கூறியிருக்கின்றார்.

ஆகவே, நாங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும், இந்த விடயங்களைப் பேசுவதற்கும் அப்பால், மக்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்காகக் கிளர்ந்தெழுந்து போராடுவது இன்னும் பயனைத் தரும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *