20 பெண்களை கற்பழித்து கொன்ற ‘சைக்கோ’ காமுகன், மனைவியுடன் கைது

மெக்சிகோவில், 20 பெண்களை கற்பழித்துக்கொன்ற ‘சைக்கோ’ கொலைகாரன், மனைவியுடன் கைது செய்யப்பட்டான். கொல்லப்பட்ட பெண்களின் உடல்களை அவர்கள் துண்டு, துண்டாக வெட்டி, நிலத்துக்கு உரமாக பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

மெக்சிகோ நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும் அங்கு 2 ஆயிரத்து 585 பெண்கள் கொல்லப்பட்டனர். அதிலும், மெக்சிகோ மாநிலத்தில்தான் அதிகமான கொலைகள் நடந்தன.

இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு பெண்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்தன. குறிப்பாக, கடந்த ஏப்ரல், ஜூலை, செப்டம்பர் ஆகிய மாதங்களில் மொத்தம் 3 பெண்களும், ஒரு 2 மாத பெண் குழந்தையும் காணாமல் போன சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதுதொடர்பாக, மெக்சிகோ மாநிலம் ஈக்காடிபெக் நகரில் வசித்து வரும் ஜூயான் கார்லஸ் (வயது 34), அவனுடைய மனைவி பேட்ரிசியா (38) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் போலீசார் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் இருவரும் வீட்டை பூட்டி விட்டு, கைக்குழந்தைகளை அமர வைத்து தள்ளிச்செல்லும் வண்டியில் பிளாஸ்டிக் பைகளில் எதையோ கட்டி எடுத்துக்கொண்டு சென்றனர். அதைப் பார்த்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து இருவரையும் மடக்கினர். பிளாஸ்டிக் பைகளை பிரித்து பார்த்தபோது, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவை எல்லாம் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட மனித உடல் பாகங்களாக இருந்தன. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஜூயான் கார்லஸையும், பேட்ரிசியாவையும் துருவித்துருவி விசாரித்தபோது, நெஞ்சை பதற வைக்கும் கொலை பின்னணி தெரிய வந்தது.

ஜூயான் கார்லஸ், 6 ஆண்டுகளாகவே பெண்களை கற்பழித்து கொலை செய்து வந்துள்ளான். 6 ஆண்டுகளில், 20 பெண்களை கற்பழித்து கொன்றுள்ளதாக அவன் போலீசாரிடம் ஒப்புக்கொண்டான். அவனுக்கு அவன் மனைவி உடந்தையாக இருந்துள்ளார்.

அப்பாவி பெண்களை அவனுடைய மனைவி பேட்ரிசியா அணுகி, தங்கள் வீட்டில் குறைந்த விலையில் ஆடை வியாபாரம் செய்வதாகவும், அதை பார்க்க வருமாறும் அன்பாக அழைப்பு விடுப்பது வழக்கம். அதை நம்பி, வரும் பெண்களை ஜூயான் கார்லஸ், கற்பழித்து, கழுத்தை அறுத்து கொன்று விடுவான்.

பின்னர், அந்த உடல்களை துண்டு, துண்டாக வெட்டி, தங்கள் நிலத்துக்கு உரம் ஆக்கி வந்துள்ளனர். எலும்புகள் மற்றும் முக்கிய உறுப்புகளை விலைக்கு விற்றனர். சில உறுப்புகளை, தாங்கள் வளர்க்கும் நாய்களுக்கு உணவாக போட்டுள்ளனர். உடல்களை துண்டாக்கவும், அப்புறப்படுத்தவும் மனைவி பேட்ரிசியா உடந்தையாக இருந்துள்ளார்.

இந்த தம்பதியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, 8 வாளிகளில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், பிரீசர் பெட்டியில், பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்ட மனித உடல் பாகங்கள் இருந்தன. வீடு அருகே உள்ள காலி நிலத்திலும், பக்கத்து நகரில் உள்ள 2 வீடுகளிலும் அவர்கள் கொல்லப்பட்டவர்களின் உடல் பாகங்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் 2 மாத குழந்தையை 800 டாலருக்கு (ரூ.58 ஆயிரம்) விற்றுள்ளனர். அந்த குழந்தையை போலீசார் மீட்டு, அதன் பாட்டியிடம் ஒப்படைத்தனர். கொல்லப்பட்ட பெண்களை அடையாளம் காண்பதற்காக, அந்த உடல் பாகங்கள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

அதே சமயத்தில், ஜூயான் கார்லசும், பேட்ரிசியாவும் மனநல பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில், ஜூயான் கார்லஸ், ‘சைக்கோ’ என்று கண்டறியப்பட்டது. பேட்ரிசியா, பிறந்ததில் இருந்தே மனநிலை பிறழ்ந்தவர் என்று தெரிய வந்தது. சித்தபிரமைக்கான அறிகுறிகளும் அவரிடம் காணப்பட்டன. இருப்பினும், நல்லது எது, கெட்டது எது என்று வேறுபடுத்தி அறியும் தன்மை கொண்டவர்களாக அவர்கள் இருப்பதாக மனநல மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பெண்கள் மீதான வெறுப்பால், இந்த கொலைகளை செய்ததாக ஜூயான் கார்லஸ், போலீசாரிடம் தெரிவித்தான். தனது சிறுவயதில், தன் தாயாரின் செய்கைகளால், பெண்கள் மீது வெறுப்பு உருவானதாகவும் அவன் கூறினான்.

சிறுவனாக இருந்தபோது, அவனுக்கு அவன் தாயார், பெண் உடைகளை போட்டு விடுவாராம். மேலும், பிற ஆண்களுடன் அவர் உல்லாசமாக இருப்பதை, அவனை கட்டாயப்படுத்தி பார்க்கச் செய்வாராம். இதனால், பெண்கள் மீது தனக்கு வெறுப்பு ஏற்பட்டதாக அவன் தெரிவித்தான். கைதான இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே, மெக்சிகோ முழுவதும் இந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈக்காடிபெக் நகரில் ஆயிரக்கணக்கானோர் கண்டன பேரணி நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *