அக்கரைப்பற்று பிரதேச மக்கள் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

அக்கரைப்பற்றிலுள்ள அம்பாறை கரையோரப் பிரதேச நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளர் காரியாலயப் பிரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்கரைப்பற்று பிரதேச மக்கள் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரையோர மக்கள் பேரவை ஏற்பாடு செய்த, இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம், அக்கரைப்பற்று பிரதேச செயலகம் முன்பாக, பிரதான வீதிக்கு அருகாமையில் நேற்று இடம்பெற்றது.

அக்கரைப்பற்றில் அமைந்துள்ள, இப்பிராந்திய நீர்வழங்கல் காரியாலயத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை சாய்ந்துமருது பிரதேசத்துக்குக் கொண்டுசெல்வதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு, கரையோர மக்கள் பேரவை கடும் எதிர்ப்பை வெளியிடுவதாக, இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இது தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு வழங்கும்படி அவசர கடிதமொன்றை, நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு, அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனமும் அனுப்பிவைத்துள்ளது.

அக்கடிதத்தில், “இக்காரியாலயத்தை, தலை வேறு உடல் வேறாகக் கூறுபோட்டு, உயிரில்லாமல் செய்துவிட வேண்டாம்.

“ஒன்றில் அக்கரைப்பற்றில் வாழ்வதற்கு அனுமதியுங்கள், இன்றேல், மொத்தமாக சாய்ந்தமருக்கு ஏற்றிச் சென்று, அங்கு பாதுகாப்பளியுங்கள்.

“அம்பாறை, கரையோரப் பிராந்தியத்தின் மொத்த சமூகம் சார்பாக சிந்திக்கின்றவர்களைப் போன்று, எமது சம்மேளனம் சிந்திக்கின்றது என்பதால், இவ்விடயம் தொடர்பான நியாயங்களைத் தெளிவுபடுத்துவதற்கும் வரலாற்றுப் பதிவுக்குமாய் இது வரையப்படுகின்றது” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *