அக்குறணை வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர் ஹக்கீம், ஹலீம் கூட்டு நடவடிக்கை
அக்குறணை பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாகவும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவருவதோடு, அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமுடன் இணைந்து விரைவில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அண்மையில் அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 40 கோடி ரூபா பெறுமதியான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த பாதிப்புகள் தொடர்பாகவும் அதற்கான இழப்பீடுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் அக்குறணை அஸ்னா பெரிய பள்ளிவாசலில் நேற்று (07) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனை குறிப்பிட்டார்.
கண்டி மாவட்ட செயலாளர், அக்குறணை பிரதேச செயலாளர் உள்ளிட்ட அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, நீர்ப்பாசனத் திணைக்களம், மகாவலி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை தாழ்நில மீள்நிரப்பு கூட்டுத்தாபனம், நகர அபிவிருத்தி அதிகார சபை, அக்குறணை பிரதேச சபை மற்றும் பிரதேசத்திலுள்ள சமூக அமைப்புகள் என்பவற்றின் பிரதிநிதிகள் ஆகியோரை பாராளுமன்றம் அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தப்படவுள்ளது.
ஜம்இய்யத்துல் உலமா சபையின் அக்குறணை கிளையின் தலைவர் மௌலவி ஷியாம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம், மாகாண சபை உறுப்பினர்கள், அக்குறணை பிரதேச சபை தலைவர் முஹம்மத் இஸ்திகார், பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளிவாசல்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலில் போது, மலைப்பாங்கான பிரதேசத்;தில் அமைந்துள்ள அக்குறணை நகரின் தாழ்நிலங்களிலும் அண்டிய பகுதிகளிலும் 2001ஆம் ஆண்டு முதல் 17 முறை வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், அவற்றை தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்று மக்கள் தெரிவித்தனர்.
அக்குறணை பிரதேசத்தில் பொழிகின்ற மழை நீர் மட்டுமல்லாமல், ஏனைய பிரதேசங்களிலும் பொழிகின்ற மழை நீரும் இப்பகுதிக்கு வடிந்து வருவதோடு இப்பகுதியிலுள்ள ஆற்றில் நீரோட்டம் குறைந்துள்ளதாக காணப்படுகின்றது. இதற்கு காரணம் ஆற்றில் பல வருடங்கள் மண் அகழ்வு செய்யப்படாததால் நீர் மகாவலி ஆற்றை சென்றடையும் வேகம் மிகவும் தாமதமாகின்றது.
இம்முறை இப்பகுதியில் வெள்ளம் திடீரென ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது பொருட்களை அப்புறப்படுத்திக் கொள்வதற்கு கூட சந்தர்ப்பம் கிட்டவில்லை. இங்கு பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சுமார் 414 பேரில் 300க்கும் மேற்பட்டோர் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 78 வீடுகளும், 20 வாகனங்களும் சேதமடைந்துள்ளன. கடைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளால் வியாபார பொருட்கள் சேதமடைந்துள்ளதோடு அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டபோது பொலிஸாரும் பிரதேச செயலாளரும் நடந்துகொண்ட முறை வரவேற்றத்தக்கதாக இல்லை என அமைச்சர்கள் முன்னிலையில் மக்கள் குற்றம்சாட்டினர்.