சரசு, சிங்பொன்னையா ‘அவுட்’! புதுமுகங்களை களமிறங்குகிறது திகா படை – மதில்மேல் பூனையாக ராம்!!

மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவதற்கு இம்முறை வாய்ப்பளிக்கப்படமாட்டாது என்று சரஸ்வதி சிவகுரு மற்றும் சிங்பொன்னையா ஆகியோரிடம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரான அமைச்சர் பழனி திகாம்பரம்.


மத்திய மாகாணசபையின் பதவிகாலம் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தல் அறிவிப்பு இன்னும் விடுக்கப்படாவிட்டாலும், தேர்தலை குறிவைத்து முன்னாள் உறுப்பினர்கள் பம்பரமாகச் செயற்பட துவங்கியுள்ளனர்.

இதன்படி தொகுதிகளை பலப்படுத்தும் வகையில் கட்சி செயற்பாட்டாளர்களுடன் பேச்சு நடத்திவருவதுடன், கட்சியின் உயர்மட்டத்துக்கும் விசுவாசம் காட்டிவருகின்றனர். பிரதான கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களும் இவ்வுபாயத்தைக் கையாண்டுவருகின்றனர்.

இந்நிலையில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவுத் தலைவியான சரசு, சிரேஷ்ட உறுப்பினரான சிங் பொன்னையா ஆகியோர் கட்சிக்குள் தமக்கான ஆதரவை – தமது விசுவாசிகள் ஊடாக பரிட்சித்துப்பார்த்துள்ளனர்.

இதற்காக தலைமைப்பீடத்துக்கும், இரண்டாம்நிலைத் தலைவருக்கும் விசேட தூதனுப்பியும் உள்ளனர். எனினும், அவர்களிடமிருந்து வந்த பதில்களோ அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளன.

“ இவ்விருவருக்கும் வாய்ப்பளிக்கப்படமாட்டாது. அவர்களின் செயற்பாடுகளில் திருப்தி இல்லை. மக்களுக்கு நான் சிறந்த சேவை வழங்கிவரும் நிலையில், இவ்விருவர்களால் குடும்ப முத்திரை குத்தப்படுகின்றது. சிறப்பாக செயற்பட்டிருந்தால் பாராட்டியிருக்கலாம். கோரிக்கையை பரீசிலித்து பார்த்திருக்கலாம்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் திகாம்பரம் கூறியுள்ளார்.

இவ்விருவருக்கும் புறம்பாக புதுமுகங்களை களமிறக்குவதற்கு தொழிலாளர் தேசிய சங்கம் வியூகம் வகுத்துவருகின்றது.


பெண்களுக்கான இடஒதுக்கீட்டு சர்ச்சைஎழும் பட்சத்தில் சரஸ்வதிக்கு வாய்ப்பளிக்கப்படுவதற்குரிய சாத்தியக்கூறுகளும் இல்லாமல் இல்லை.
அதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து வெளியேறி தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்துள்ள முன்னாள் மாகாண அமைச்சர் ராம், எந்தகட்சியின் சார்பில் போட்டியிடுவார் என்பது குறித்தும் இன்னும் அறிவிப்பு விடுக்கப்படவில்லை.

மலையக மக்கள் முன்னணியிலா அல்லது ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பிலோ அவர் போட்டியிடுவார் என்பது பற்றி இன்னும் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *