வடக்கு, கிழக்கை இணைக்கவே சிங்கள – முஸ்லிம் கலவரமாம்! – விமலின் கண்டுபிடிப்பு இது

புலம்பெயர் தமிழ் தலைமைகள் இந்த நாட்டில் சிங்கள – முஸ்லிம் கலவரங்களை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், அதற்காக சிங்களக் குழுக்களுக்கு பணம் வழங்குவதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கு இணைப்பதனை விரும்புவதில்லை. சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தினால், முஸ்லிம்கள் இலகுவாகவே தமிழ் மக்களுடன் இணைந்து கொள்ளவார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்களில் ஒருவரை திட்டமிட்டு கொலை செய்தால், சிங்களவர்கள் மீது வெறுப்புக் கொண்டு தமிழர்களுடன் முஸ்லிம்கள் இணைய வழி ஏற்படுகின்றது.

இதனால், வடக்கு, கிழக்கு இணைப்பை இலகுவாக முன்னெடுக்கலாம் என்று புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கனவு காண்கின்றன. இதற்காக பணத்தை அந்த அமைப்புக்கள் அதிகம் செலவு செய்து வருகின்றன” – என்றார்.

மஹிந்த, மைத்திரி, கோட்டா கொலைச் சதியை வெளிப்படுத்திய நாமல் குமார, கிழக்கு மாகாணத்தில் கலவரம் ஏற்படுத்த தனக்கு பிரான்ஸிலிருந்து பணம் வழங்கப்பட்டது எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *