விளையாட்டு மைதான புணரமைப்பு தொடர்பில் 108.5 மில்லியன் ரூபா மோசடி?

(எம்.எல்.எஸ்.முஹம்மத்)

எந்தான ஹவுப்பே தோட்டத்தைச் சேர்ந்த விஜே குமார் சிறீதரன் நிவித்திகல தமிழ் மகா வித்தியாலயத்தில் தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்த விளையாட்டு வீரர்.தனது விளையாட்டுத் திறமைகளை வெளிப்பத்தி பாடசாலைக்கு பல பெருமைகளை ஈட்டிக் கொடுத்த அவர் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள கிராமிய மாணவர்களுக்கு விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கு முன்னின்று உழைத்துக் கொண்டிருக்கின்றார்.எனினும் தனது தோட்டப் பகுதியில் விளையாட்டு மைதான வசதிகள் இல்லாததால் அம்மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர முடியாதுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.

இதற்கான காரணம் எது? என நாம் அவரிடம் கேட்டபோது “எமது ஹவுப்பே தோட்டம் பொருளாதார ரீதியில் பின்தங்கிய வறிய தோட்ட மக்களை பெருமளவில் கொண்டுள்ள ஒரு கிராமமாகும்.இங்கு தமிழ் மொழி மூல இரண்டு பாடசாலைகள் உள்ள போதிலும் அப்பாடசாலைகளின் விளையாட்டு மைதானங்கள் நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாமல் உள்ளன.பாடசாலை பருவத்தில் விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்திய பல மாணவர்கள் இன்று தனது விளையாட்டு திறன்களை வளர்த்துக் கொள்ள பொருத்தமான மைதான வசதிகள் இன்றி மனநல ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களாகவும் போதைப் பொருள் பாவனையாளர்களாகவும் மாறிக்கொண்டிருக்கின்றனர்.

அரசு எமது தோட்டப் பகுதியில் சிறந்த விளையாட்டு மைதானமொன்றை அமைத்துத் தருமானால் எதிர்கால தலைமுறையையாவது பயனுள்ள சமூக நற்பிஜைகளாக உருவாக்க முடியும்”, என தனது எதிர்பார்ப்பை அவர் முன்வைக்கிறார்.
இலங்கையில் மாகாண சபை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட பல மாகாணங்கள் பல்வேறுபட்ட சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளை அரச நிதி ஒதுக்கீடுகளுடன் முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக கிராமிய மட்டத்தில் விளையாட்டு மைதானங்களை அமைத்து அக்கிராம இளைஞர் யுவதிகளின் விளையாட்டுத் திறன்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.இதனால் திறமைமிக்க பல இளைஞர் யுவதிகளுக்கு மாகாண தேசிய மட்ட விளையாட்டு அணிகளில் பங்கேற்று தேசத்திற்கு பெருமை சேர்த்துத் கொண்டிருக்கின்றனர்.

சபரகமுவ மாகாண சபையும் தனது விளையாட்டு அமைச்சின் ஊடாக பல மில்லியன் கணக்கான ரூபாக்களை செலவு செய்து கிராமிய விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ள போதிலும் அவை எதுவும் மக்கள் நலனுக்காக பயன்படுத்தப்படவில்லை என்ற விடயம் அண்மையில் நாம் மேற்கொண்ட புலனாய்வு தேடல்களின் மூலம் தெரிய வந்துள்ளன.

சபரகமுவ மாகாண சபை கடந்த ஐந்து வருடங்களில் மாத்திரம் 108.5 மில்லியன் ரூபாக்களை மைதான அபிவிருத்திக்கென செலவு செய்துள்ளதாக மாகாண விளையாட்டு அமைச்சின் தகவல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கொரோனா தொற்றுநோயின் பாதிப்பும் அதன் தாக்கமும் முழு இலங்கை மக்களையும் அச்சுறுத்திக்கொண்டிருந்த கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மாத்திரம் மேற்படி சபகமுவ மாகாண சபை மைதான புணரமைப்பு பணிகளுக்கென 57.5 மில்லியன் ரூபா பொது நிதியை பயன்படுத்தியுள்ளது என மேற்படி அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் மேற்படி பெருந்தொகையான மக்கள் பணம் எவ்வாறு செலவளிக்கப்பட்டுள்ளன? எந்த விளையாட்டு மைதானங்கள் இந்நிதியினால் புணரமைக்கப்பட்டன? என்ற தகவல்களை வழங்க மறுக்கும் மேற்படி விளையாட்டு அமைச்சின் செயற்பாடுகள் குறித்து பல தரப்பினரும் தமது பாரிய கண்டனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

மாகாண சபை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் அனைத்து சமூக அபிவிருத்திப் பணிகளும் ஆளுங்கட்சி அரசியல் சார்ந்த சமூகப் பணிகளாகவே மாறியுள்ளது என குற்றம் சுமத்தும் சபரகமுவ மாகாண சபையின் இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் இப்லார் எம்.யஹ்யா தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
“பொது மக்களின் வரிப்பணத்தின் ஊடாக சேகரிக்கப்படும் பொது நிதியில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.நேரடியான ஆளுங்கட்சி அரசியல் தலையீடுகளுடன் இடம்பெறும் ல்லை.
மாறாக மறைமுகமாக பணம் உழைக்கும் வேலைத் திட்டம் மாத்திரமே முன்னெடுக்கப்படுகிறது.கடந்த காலங்களில் கிராமிய மைதான அபிவிருத்திப் பணிகளுக்கென ஒவ்வொரு மைதானத்திற்கும் எமது சபரகமுவ மாகாண சபை 10 மற்றும் 15 மில்லியன் ரூபாக்களை செலவு செய்துள்ளன.ஆனால் ஒருசில சிறிய மாற்றங்கள் தவிர பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் எதுவும் அங்கு இடம்பெறவில்லை.இந்த மோசடி தொடர்பில் நேர்மையான விசாரணைகள் அவசியம் என அவர் மேலும் தெரிவிக்கிறார்.

இரத்தினபுரி சீவெளி மைதானம் மற்றும் முந்துவ மைதானங்கள் தவிர இரத்தினபுரி மாநகர எல்லைக்குள் பல கிராமிய மைதானங்கள் உள்ளன.குறிப்பாக மஹவெல தோட்ட மைதானம் மற்றும் மிஹிந்துகம மைதானங்கள் இரண்டும் உள்ளன.இவ்விரு மைதானங்களையும் புணரமைப்பு செய்வதற்கென சபரகமுவ மாகாண சபை தலா 15 மில்லியன் ரூபா அளவில் ஒதுக்கீடு செய்துள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இப்லார் குறிப்பிடுகின்ற போதிலும் அங்கு எவ்வித அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

மஹவல தோட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ரவீந்திர குமாரிடம் மைதான அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கேட்டபோது “ கடந்த இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் எமது மைதானத்தை சுற்றி 15 லட்சம் ரூபா அளவில் பெறுமதியான பச்சை நிற கம்பி வேலி மற்றும் மின் விளக்குகள் சிலதும் இரத்தினபுரி மாநகர சபை முன்னாள் மேயர் நிலன்த ரொஷான் என்பவரால் அமைத்துக் கொடுக்கப்பட்டன.
இது தவிர எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கையும் இம்மைதானத்தில் மேற்கொள்ளப்படவில்லை.உள்ளுராட்சி மன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இன்று இம்மைதானம் விளையாட்டு மைதானமாக இல்லை.இங்குள்ள கால்நடைகளும் போதைப் பொருள் பாவனையாளர்களும்தான் இதன் பயனாளிகளாக உள்ளனர்”, என அவர் தெரிவிக்கிறார்.

இரத்தினபுரி மாநகர எல்லைகுட்பட்ட மஹவெல தோட்டத்தின் மத்தியில் அமைந்திருக்கும் மேற்படி மைதானம் இன்று வயல்வெளி போல் காட்சியளிக்கிறது. இரத்தினபுரி மாநகர சபை இதனை விளையாட்டு மைதானமாக நோக்க மறுக்கிறது.மாறாக காணிவேல் நடத்தி எங்களின் பணங்களை சுரண்ட முயற்சிக்கும் வியாபாரத் திடலாகவே இதை நோக்கிறது என ஓய்வுபெற்ற ஆசிரியர் எஸ்.எச்.ஏ.கபீர் தெரிவிக்கிறார்.

மஹவெல தோட்ட விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு மாத்திரமின்றி அங்கிருந்து 800 மீட்டர் அளவில் தொலைவிலுள்ள மிஹிந்துகம மைதான புணரமைப்பு பணிகளுக்குமென சபரகமுவ மாகாண சபை 15 மில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளதாக இரத்தினபுரி மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் இப்லார் தெரிவிக்கிறார்.

இரத்தினபுரி மாநகர சபையின் முன்னாள் மேயர் நிலன்தவின் வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள மேற்படி மிஹிந்துகம மைதானமும் இன்று கைவிடப்பட்ட மைதானமாகவும், போதைப் பொருள் பாவனையாளர்களின் வியாபாரத் தளமாகும் மாறியுள்ளது.இதனால் எமது மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பிழையான முன்மாதிரிகள் வழங்கப்படுகின்றன.சொந்த அரசியல் இலாபங்களுக்காக முன்னெடுக்கப்படும் தவறான முயற்சிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.அத்துடன் இம்மைதானம் உரிய முறையில் அபிவிருத்தி செய்து தரப்பட வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் அல்ஹாஜ்.எம்.ஸனீர் தெரிவிக்கின்றார்.

மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இரத்தினபுரி மாநகர சபையின் முன்னாள் மேயரும் ஸ்ரீலங்கா பொதுஜென பெரமுனவின் முக்கிய செயற்பாட்டாளருமான நிலன்த ரொஷானிடம் கேட்ட போது
மஹவெலவத்தை மற்றும் மிஹிந்துகம உட்பட பல மைதான அபிவிருத்திப் பணிகளை சபரகமுவ மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டுடன் நாம் ஆட்சியில் இருந்தபோது முன்னெடுத்தோம்.எனினும் 100 சதவீதம் அவற்றை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியவில்லை.சில குறைபாடுகள் உள்ளன.அபிவிருத்திப் பணிகளின் தரம் தொடர்பில் சிக்கல்கள் உள்ளன.நிதி முகாமைத்துவத்தில் சில பிரச்சினைகள் நிகழ்ந்துள்ள போதிலும் மோசடிகள் இடம்பெறவில்லை.எமது அறிக்கைகளை பார்வையிடுவதன் மூலம் இதனை தெளிவுபடுத்திக்கொள்ளலாம் என அவர் தெரிவிக்கிறார்.

மைதான அபிவிருத்திகள் மாத்திரமின்றி பல அபிவிருத்திப் பணிகளை இரத்தினபுரி மாநகர சபை முன்னெடுத்து வருகிறது.அரச மற்றும் அரச சார்பற்ற பல நிறுவனங்கள் எமக்கு உதவியளித்துக் கொண்டிருக்கின்றன.எனினும் ஆட்சி மாற்றங்கள் உட்பட தொடர்ச்சியான அரசியல் தலையீடுகளால் சில அபிவிருத்தித் திட்டங்களை இன்னும் எங்களால் நிறைவு செய்ய முடியவில்லை என இரத்தினபுரி மாநகர சபையின் அபிவிருத்திப் பிரிவு தெரிவிக்கிறது.

மஹவல தோட்டம் மற்றும் மிஹிந்துகம மைதான அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நியாயமானதா? என இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினர் ஷியாம் தெரிவிக்கையில்

“ எமது அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் மக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் தொடர்ச்சியாக கிடைக்கப் பெறுகின்றன.நாட்டிலுள்ள நிதி நெருக்கடிகளால் இடை நிறுத்தப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் இன்னும் ஆறு மாதங்களில் மீள ஆரம்பிப்பதற்கு நாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என அவர் தெரிவிக்கிறார்.

எனினும் மேற்படி ஆளும் கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு எதிர்மறையான கருத்துக்களையே இரத்தினபுரி மாநகர சபையின் எதிர் தரப்பு உறுப்பினர் முஹம்மத் றம்சான் தெரிவிக்கின்றார்.

இரத்தினபுரி மைதான அபிவிருத்தி தொடர்பில் மாநகர சபை அபிவிருத்திப் பிரிவு தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் இரத்தினபுரி மாவட்ட சர்வமதக் குழுவின் தலைவர் குணவன்ச தேரரிடம் கேட்டபோது

மக்களின் நலன்களுக்காக உழைக்க வேண்டிய அரசியல் தலைவர்களும் அரச நிறுவனங்களும் ஊழல் மிக்க பாதையிலேயே இன்று பயணிக்க ஆரம்பித்துள்ளன.அரச தலையீடுகளுடன் அபிவிருத்திப் பணிகள் திட்டமிடப்பட்டு வருவதால் இரத்தினபுரி மாநகர சபை பல மில்லியன் வருமானங்களை இழந்துள்ளன.அத்துடன் பெருந்தொகையான பணம் வீணடிக்கப்பட்டுள்ளன.இந்த விடயங்கள் தொடர்பில் மாநகர சபை தொடர்ந்தும் மௌனமாக இருப்பது கண்டிக்கத் தக்கது என அவர் தெரிவிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *