மூக்குக் கண்ணாடிகள் கொள்வனவிலும் வடக்கு சுகாதார அமைச்சு நிதி மோசடி!

வடக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் ஞா.குணசீலனின் வருடாந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் மன்னார் மாவட்டத்தில் மூக்குக்கண்ணாடி வழங்கலில் பெரும் முறைகேடு இடம்பெற்றிருப்பதாக மாகாணப் பிரதி கணக்காய்வாளர் நாயத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், அந்த விடயம் கணக்காய்வாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞனாம் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வு நேற்றுக் கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தாலைமையில் இடம்பெற்றது.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, “அமைச்சர் எனக் கூறப்படும் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் மன்னார் மாவட்டத்தில் 2015ஆம், 2016ஆம் ஆண்டுகளில் வழங்கிய மூக்குக் கண்ணாடிகள் கொள்வனவில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன. 350 ருபா பெறுமதியான மூக்குக் கண்ணாடிகளே 950 ருபாவுக்குக் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டும் இவ்வாறு மூக்குக்கண்ணாடிகள் கொள்வனவு செய்யப்பட்ட நிலையில் கணக்காய்வுப் பிரிவு கண்டுபிடித்ததைத் தொடர்ந்து அதற்கான நிதி வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

இதனை அடுத்து கருத்துத் தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன், “இந்த குற்றச்சாட்டு சகல மாகாண சபை உறுப்பினர்களுக்குமான பொதுக் குற்றச்சாட்டாக மாறும் அபாயம் உள்ளது. உண்மையில் உறுப்பினர்களுக்கு வருடாந்தம் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியைக் கையாளுவதில் மாகாண சபை உறுப்பினர்களுக்குப் பங்கில்லை. ஆகவே, இது தான் நடந்தது, இப்படித்தான் நடந்தது, இவர்தான் ஆள் என்பதைக் கூறி தெளிவாகப் பேசப்படவேண்டும்” என்றார்.

இதன் பின்னர் கருத்து வெளியிட்ட உறுப்பினர் சுகிர்தன், “ஒரு சில அரசியல்வாதிகள் விடும் தவறுகளால் அரசியல்வாதிகள் என்றாலே கள்ளர்களாகப் பார்க்கின்ற நிலையே ஏற்படுகிறது. இத்தகைய அரசியல்வாதிகளால் அதிகாரிகளே பாதிக்கப்படுகின்றனர். இந்தக் கண்ணாடிகள் ஒரு பான்சிக் கடையில் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக அறிகின்றோம். ஆகவே, கண்ணாடிகளை எவ்வாறு அந்தக் கடையில் கொள்வனவு செய்ய முடியுமென்ற கேள்வி எழுகின்றது.

இவ்வாறு ஒரு சிலர் விடும் தவறு எங்கள் அனைவரையும் பாதிக்கின்றது. யாராக இருந்தாலும் குற்றம் குற்றம் தான். ஆகவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது அவசியமானது” என்றார்.

இதற்குப் பதிலளித்த அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம்,

“எதிர்வரும் 8 ஆம் திகதி கணக்காய்வுக் குழுவின் இறுதிக் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தின் பின்னர் பிரதிக் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை சகல உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும்” என்று கூறினார்.

மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் கருத்துத் தெரிவிக்கையில், “குணசீலனின் புகழ் பாடும்போது அவரது பெயரைப் பயன்படுத்தலாம். ஆனால், அவர் குறித்து பிழைகளைக் கூறும்போது பெயரை குறிப்பிடக்கூடாதா? இது வெளிப்படைத் தன்மைக்கும், நல்லாட்சிக்கும் சிறந்ததா?” எனக் கேள்வி எழுப்பியதுடன், “இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெயர்களைக் குறிப்பிடாமல் பேசுவதன் ஊடாக தவறுகளுக்கு நாங்களும் உடந்தையாக மாறுகின்றோம்” என்று கூறினார்.

இதன்போது பதிலளித்த அவைத் தலைவர், “இந்த விடயத்தில் குணசீலன் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளாரா? அல்லது கொள்வனவு அதிகாரிகள் சம்மந்தப்பட்டுள்ளார்களா? என்பது கேள்வியாக உள்ளது. இவ்வாறான நிலையில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க இயலாது. ஆனாலும், இந்த விடயம் கணக்காய்வாளர் நாயகத்துக்கு பாரப்படுத்தப்படும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *