சபாபீடத்தை முற்றுகையிட்ட விமலுக்கான தடை நீக்கம் – பிரசன்னவுக்கு ஆப்பு நீடிப்பு!

நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கு விமல்வீரவன்ஸ எம்.பிக்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டுவாரகாலத் தடை நேற்று நள்ளிரவுடன் நீங்கியுள்ளது.


எனவே, எதிர்வரும் 9ஆம் திகதிகூடவுள்ள சபை அமர்வுகளில் அவர் பங்கேற்கமுடியும். எனினும், பிரசன்ன ரனவீர எம்.பிக்கான தடை தொடர்ந்தும் நீடிக்கின்றது.


நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறிச் செயற்பட்ட கூட்டுஎதிரணி எம்.பிக்களான பிரசன்ன ரணவீர, விமல் வீரவன்ச ஆகியோருக்கு சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்கான தடை கடந்த 21 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்தது.

பிரசன்ன ரணவீர எம்.பி நான்கு வாரங்களும், விமல்வீரவன்ஸ எம்.பிக்கு இரண்டு வாரங்களும் சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஜூன் மாதம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன், புலிகள் மீண்டெழவேண்டும் என்ற சாரப்பட கருத்துக் கூறியிருந்தார்.

இதற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கடந்த ஜூலை 3ஆம் திகதி பாராளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினர். விஜயகலா மகேஸ்வரன் எம்பிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறி சபையில் குழப்பத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது பிரசன்ன ரணவீர எம்பி சபை நடுவில் வந்து செங்கோலை பறித்துச் செல்வதற்கு முயற்சித்தார்.

எனினும், படைக்கல சேவிதர்கள் அந்த முயற்சியை முறியடித்திருந்தனர். அதேநேரம் விமல் வீரவன்ச எம்பி சபாநாயகர் ஆசனத்துக்கு முன்னால் வந்து சபாநாயகரை கடுமையாக திட்டினார். சபையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *