அரசியல் கைதிகளுக்கு விடுதலை கோரி வவுனியாவில் சத்தியாக்கிரகப் போராட்டம்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

தமது விடுதலையை வலியுறுத்தியும், தமது வழக்குகளை துரிதப்படுத்தக் கோரியும் 12 அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணிவரை வவுனியா மாவட்ட செயலகத்தின் அருகாமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

“விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகனை விடுதலை செய்”, “உண்ணாவிரதிகளின் கோரிக்கையை உடனே நிறைவேற்று”, “அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கு”, இரத்துச் செய் இரத்துச் செய் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடன் இரத்துச் செய்”, “நல்லாட்சி அரசே அரசியல் கைதிகளும் மனிதர்களே”, “புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை மீண்டும் கைதுசெய்யாதே” என எழுதப்பட்ட பதாதைகளும் அங்கு தொங்கவிடப்பட்டிருந்தன.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கறுப்புப் பட்டியணிந்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர். இதில் மீள்குடியேற்றம், புளர்வாழ்வு மற்றும் வடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராஜா, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *