போலித் தேசியவாதிகளை மக்கள் இனங்காணாவிட்டால் பேராபத்து! – சுமந்திரன் எம்.பி. எச்சரிக்கை
“போலித் தேசியவாதிகளை மக்கள் அடையாளம் காணவேண்டும். அவர்களை இனங்கண்டு மக்கள் ஒதுக்காவிட்டால், முன்னைய நிலமைக்கு தள்ளப்படும் ஆபத்து இருக்கின்றது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வரணி மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழா நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன், “ஆசிரியராக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கடமையாற்றினேன். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்துதான் சென்று வந்தேன். இராணுவச் சோதனைச் சாவடியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து வருமாறு சொல்லுவார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள், இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் என்ன நடக்கின்றது என்பதைக் கேட்டார்கள். ஒரு நாள், இராணுவச் சீருடையுடன் இராணுவச் சோதனைச் சாவடியில் ஒருவர் நின்றார். அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் முன்னர் நின்றிருந்தவர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து வருமாறு அவரும் கூறினார். யார் எந்தப் பக்கம் நிற்கின்றார்கள் என்பதே தெரியவில்லை” – என்றார்.
இதன் பின்னர் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
“மாகாணசபை உறுப்பினர் சயந்தன் குறிப்பிட்டதைப் போன்று யார் எந்தப் பக்கம் நிற்கின்றார்கள் என்பது அன்று மட்டுமல்ல இன்றும் தெரியவில்லை.
அதிகமாக தேசியம் கதைப்பவர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும். விளையாட்டில் ‘சேம் சைட்’ கோல் போடுவதைப் பற்றிக் கேள்விபட்டிருப்பீர்கள். நாங்கள் வெற்றி பெறவேண்டும் என்றால் எதிர்பக்கம் இருக்கும் கோல் கம்பத்துக்குள் பந்தை தள்ளவேண்டும். எங்கள் கோல் கம்பத்துக்குள் பந்தைத் தள்ளினால் எதிர் தரப்புத்தான் வெற்றி பெறும். கிரிக்கெட்டில் ‘ஹிட் விக்கெட்’உம் இதைப் போன்றுதான். அப்படிச் செய்பவர்கள் பலர் இங்கிருக்கிறார்கள்.
உதாரணத்துக்கு ஒரு விடயத்தைச் சொல்கின்றேன். திலீபன் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு தடை விதித்து பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவுகூருவதாக அவர்கள் குறிப்பிட்டனர். நீதிமன்றில் இந்த வழக்கு எடுக்கப்பட்டபோது, நாங்கள் முன்னிலையாகினோம். அகிம்சை வழியில் போரடியவரையே நினைவுகூருகின்றோம் என்பதைச் சுட்டிக்காட்டினோம். ஆனால் அங்கு இன்னொரு சட்டத்தரணிகள் குழு வந்திருந்தது. அவர்கள் நீதிமன்றில் சமர்பணங்கள் முன்வைக்க முற்பட்டபோதும் நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.
நாங்கள் ‘கோர்ட்டில்’ வாதங்களை முன்வைத்தோம். அவர்கள் ‘ரோட்டில்’ தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவுகூருவது தொடர்பில் பேசுவதற்காக கிடைத்த வாய்ப்பை மன்றில் பேசிய சட்டத்தரணிகள் வீணடித்துவிட்டார்கள் என்று குறிப்பிட்டனர். பொலிஸார் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூர்வதற்கு எதிராகவே வழக்கைத் தாக்கல் செய்தனர். அந்தச் சட்டத்தரணிகளும் தமிழீPழ விடுதலைப் புலிகளை நினைவுகூர்வது பற்றி பேசவே வந்துள்ளனர். யார் யாரோடு நிற்கின்றார்கள் என்றே தெரியவில்லை.
அதிதீவிரமாக தேசியம் பேசிக் கொண்டு எதிர்தரப்புக்கு ‘ஸ்கோர்’ செய்கின்றார்கள். அதிதீவிரமாக தேசியம் பேசுவர்கள் எதிர்தரப்புடன் இருப்பார்கள். அதை மறைக்க, மக்கள் முன்பாக தாங்கள் தீவிரமாகத் தேசியப் பேசுபவர்கள் போல் காட்டிக் கொள்வார்கள். இது இங்கு மட்டுமல்ல தெற்கிலும் உள்ள விடயம்தான்.
பண்டாரநாயக்கா, ஜெயவர்த்தான போன்றவர்கள் கிறிஸ்தவர்கள். அவர்கள் இந்த நாட்டை ஆண்டபோது அதி தீவிர பௌத்தர்கள் போன்று காட்டிக் கொண்டார்கள். புத்தரை மிஞ்சும் அளவுக்குச் செயற்பட்டார்கள். தாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதை மறைப்பதற்காக அதிதீவிரமான பௌத்தர்கள் போன்றுச் செயற்பட்டார்கள்.
அதிதீவிரமான தேசியவாதிகளை மக்கள் அடையாளம் காணவேண்டும். அப்படியானவர்களை அடையாளம் காணாவிட்டால் எதிர்காலத்தில் ஆபத்து ஏற்படும். முன்னைய நிலமைக்கு, போருக்கு தள்ளப்பட வேண்டி ஏற்படும்.
நிதானமாகச் சிந்தித்துச் செயற்படவேண்டும். அதற்காக எமது உரிமைகளை நாம் விட்டுக் கொடுக்கவேண்டும் என்றில்லை. எங்கள் உரிமைகளையும் பெற்றுக் கொண்டு ஏனையோரின் உரிமைகளையும் மதிக்கவேண்டும்” – என்றார்.