பயங்கரவாதத்தை தோற்கடித்தோர் உள்ளே! பயங்கரவாதிகளோ சுதந்திரமாக வெளியே!! – பிள்ளையானைப் பார்வையிட்ட பின் நாமல் கருத்து

பயங்கரவாதிகளை வெளியிலும் பயங்கரவாத்தைத் தோற்கடிக்க உதவியவர்களை உள்ளேயும் வைத்திருக்கின்றது மைத்திரி அரசு என பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

நேற்றுச் சனிக்கிழமை சிறையில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனைப் (பிள்ளையான்) பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மூன்று வருடங்கள் பிள்ளையானைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வைத்துள்ளனர். எம்மைப் பொறுத்தவரை பயங்கரவாதியாக இருந்து அரசுடன் இணைந்து பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க உதவியவர் அவர்.

இன்று பயங்கரவாதிகளாக இருந்தவர்களை விடுதலை செய்துள்ளனர். பயங்கரவாத்தை முறியடிக்க உதவி செய்தவர்களுக்குத் தண்டனை வழங்குகின்றனர்.

உண்மையிலே எமது அரசுக்குப் பல வழிகளிலும் உதவி செய்தவர் என்ற முறையிலும், யுத்த வெற்றிக்குக் காரணமாக இருந்தவர் என்ற ரீதியிலும் இன்று பிள்ளையானைப் பார்வையிட வந்துள்ளேன்.

நாங்கள் பல தடவை வந்து பார்த்துச் சென்றுள்ளோம். ஊடகங்களுக்கு அது தெரியாது. இந்த அரசுக்கு ஒரு கொள்கை இல்லை. பிள்ளையான் மட்டுமல்ல பல அரசியல்வாதிகளைச் சிறைக்கு அனுப்பி அரசியல் செய்யப் பார்க்கின்றது. என்னையும் 3 தடவைகள் அடைக்க முற்பட்டதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

இந்த அரசை யார் விமர்சனம் செய்தாலும் சிறைச்சாலைக்குச் செல்லும் நிலைதான் அதிகமாக உள்ளது. நீதித் துறைகூட இன்று அடிமட்ட நிலைக்குச் சென்றுள்ளது. அரசு எதைச் செய்ய நினைக்கின்றதோ அதுதான் இங்கு நடக்கிறது.

இலங்கையில் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒருவரை நாம் ஜனாதிபதியாக நியமிப்போம். எனக்கு அதற்கான வயது இல்லை. 100 நாட்களில் ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் என்று கூறிய இந்த அரசு அடுத்த ஜனாதிபதி யார் என்ற போட்டியில் தற்போது உள்ளது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *