புலிகளின் தாக்குதலுக்குப் பயந்தே மஹிந்த, கோட்டா, பொன்சேகா போரின் இறுதி வாரங்களில் நாட்டை விட்டே ஓடினர்! – அமெரிக்காவில் மைத்திரி தெரிவிப்பு

“விடுதலைப்புலிகள் போரில் பின்வாங்கப் போவதில்லை. அவர்கள் தென்னிந்தியாவில் அதாவது சென்னையிலோ அல்லது வேறு காட்டுப் பகுதியிலிருந்தோ விமானம் மூலம் வந்து குண்டு மழை பொழிந்து கொழும்பை நாசப்படுத்துவார்கள் என்று அரசுக்குத் தகவல் கிடைத்திருந்தது. அதனால் அப்போதைய ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புச் செயலர், இராணுவத் தளபதி ஆகியோர் பயந்து நாட்டை விட்டு வெளியேறினார்கள். இதுதான் உண்மை.”

– இவ்வாறு அமெரிக்காவில் வைத்து அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

“போரின் இறுதி இரு வாரங்களில் நாந்தான் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன். ஆயினும் கொழும்பில் இருக்கவில்லை. என் இருப்பிடத்தை புலிகள் அறிந்து கொள்வார்கள் என்ற காரணத்தால் நாட்டின் ஒவ்வொரு பகுதிகளில் தங்கியிருந்தேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐ.நா. பொதுச் சபையின் 73 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால நேற்றுமுன்தினம் மாலை அங்குள்ள இலங்கையர்களைச் சந்தித்துப் பேசினார். இதன்போதே அவர் இந்தப் புதிய தகவலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவர் அங்கு தனது உரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“இலங்கையில் இடம்பெற்ற போர் நிறைவடைந்த இறுதித் தருணங்களை எல்லோரையும் விட நானே நன்கு அறிந்தவன். போரின் இறுதி இரு வாரங்கள் நானே நாட்டின் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன்.

முன்னாள் ஜனாதிபதியோ, முன்னாள் பிரதமரோ, இராணுவத் தளபதியோ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளரோ யுத்தத்தை வெற்றி கொண்ட இரு வாரங்களில் நாட்டில் இருக்கவில்லை. இது குறித்து பலருக்கு ஞாபகம் இருக்காது. அவர்கள் ஏன் நாட்டை விட்டுச் சென்றார்கள் என்று கூட யாருக்கும் தெரியாது. ஆனால் அவர்கள் ஏன் சென்றார்கள் என்று எனக்குத் தெரியும்.

விடுதலைப்புலிகள் விமானம் மூலம் வந்து கொழும்பில் தாக்குதல் நடத்தும்போது ஒரு பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் போரிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. அவர்கள் தென்னிந்தியாவில் அதாவது சென்னையிலோ, அல்லது வேறு காட்டுப் பகுதியிலிருந்தோ விமானம் மூலம் வந்து குண்டு மழை பொழிந்து கொழும்பை நாசப்படுத்துவார்கள் என்று அரசுக்கு முன்னரே தகவல் கிடைத்திருந்தது.

அதனால்தான் அவர்கள் அனைவரும் பயந்து நாட்டை விட்டு வெளியேறினார்கள். இதுதான் உண்மைக் கதை. இந்த இரு வாரங்களில் நான் கொழும்பில் இருக்கவில்லை.

என் இருப்பிடத்தை புலிகள் அறிந்து கொள்வார்கள் என்ற காரணத்தால் நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலேயே தங்கியிருந்தேன். இதுதான் யுத்தத்தின் அனுபவம். விடுதலைப்புலிகளின் ஐந்து தாக்குதல்களை எதிர்கொண்டவன் நான்.

அமைச்சர்கள் என்ற வகையில் அன்று நாம் காலையில் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவது சந்தேகமாகவே இருந்தது. அவ்வாறான அனுபவங்களைக் கொண்டவன் என்ற வகையில் எமது பாதுகாப்புப் படையினர் எத்தகைய அர்ப்பணிப்புகளைச் செய்தார்கள் என்பதை நான் அறிவேன்.

2015 ஆம் ஆண்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து இலங்கை மிகவும் விலகியே இருந்தது. ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிலிருந்து கிடைக்கப் பெற்ற அழுத்தங்களும் கருத்து வேறுபாடுகளுமே எனது நண்பரான முன்னாள் ஜனாதிபதி இரண்டு வருடங்களுக்கு முன்னரே தேர்தலை நடத்துவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த அமைச்சரவையின் ஒரு அமைச்சர் என்ற வகையில் அந்தத் தேர்தலை முற்றாக எதிர்த்தவன் நான். அதனை எழுத்து மூலமாகவும் தெரிவித்தேன். ஏனெனில் அரசியல் அனுபவங்கள் காரணமாக அவ்வேளையில் தேர்தலுக்குச் சென்றால் அசௌகரியமாக நிலைமைகளை எதிர்நோக்க நேரிடும் என நான் கருதினேன். ஆயினும் அக்கடிதத்தை எழுதிய சந்தர்ப்பத்திலும் நான் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவேன் என நினைத்திருக்கவில்லை.

எனவே, ஜனாதிபதி பதவியை ஏற்றதும் என் முன் இருந்த முக்கியமான பணி நாட்டுக்காக வேண்டி சர்வதேசத்தை வெற்றி கொள்வதாகும். ஜனாதிபதி பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டு முதல் இரண்டரை வருடங்களை நான் உலகத் தலைவர்களைச் சந்திப்பதற்காகவே ஒதுக்கியிருந்தேன். புதியதோர் அரசை முன்கொண்டு செல்வதற்கு எமக்கு இடமளியுங்கள், கடந்த அரசுடன் இருந்த கருத்து வேறுபாடுகளை நீக்கிக் கொள்ளுங்கள் என்று நான் அவர்களுக்கு விடயங்களைத் தெளிவுபடுத்தினேன்.

இன்று ஐக்கிய நாடுகள் சபை எமது சிறந்த நட்பு அமைப்பாகவுள்ளது. இன்று அவர்கள் எம்முடன் மிகவும் சுமூகமான முறையில் செயற்பட்டு வருகின்றனர். நான் அறிந்த வகையில் உலகில் எந்தவொரு நாடும் இன்று எம்முடன் பகைமை பாராட்டும் நிலையில் இல்லை. அவர்கள் அனைவரையும் நாங்கள் நண்பர்களாக மாற்றியிருக்கிறோம்.

இந்த யுத்தத்துடன் எவ்வித தொடர்புமற்ற வகையில் எத்தனை கொலைகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கொலைகளுக்கு யார் காரணம். அதற்குப் பின்னால் இருந்தவர்களை யார் இயக்குவித்தனர். இவைதான் பிரச்சினைகளாகும். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எழுந்த முக்கியமான குற்றச்சாட்டு இதுவாகும்.

லசந்த விக்ரமதுங்கவை யார் கொலை செய்தது? கீத் நொயார் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் யார்? தாஜுதீனைக் கொலை செய்தவர்கள் யார்? சிரச போன்ற ஊடக நிறுவனங்களுக்கு தீ வைத்தவர்கள் யார்? ஊடகவியலாளர்கள் ஏன் நாட்டை விட்டுச் சென்றார்கள்? இவ்வாறான பல விடயங்களைக் குறிப்பிட முடியும்.

இன்று உலகில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. டொலரின் பெறுமதி அதிகரித்துள்ள நிலைமையினால் எமது நாட்டின் ரூபாவின் பெறுமதி குறைந்துள்ளது. இது வாழ்க்கைச் செலவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *