கொழும்பை முற்றுகையிட புலிகள் திட்டம் வகுத்தனரா?

இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதி வாரங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பு கொழும்பில் விமான தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தான் அறிந்திருக்கவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் போரின் இறுதிக்கட்டத்தில் தான் வெளிநாடு செல்லவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரதமர், அப்போதைய இராணுவ தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் போரின் இறுதிக் கட்டத்தின் போது இலங்கையில் இருக்கவில்லை” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறித்து கருத்து வெளியிடும் போதே கோத்தபாய இதனை கூறியுள்ளார்.

“போரின் இறுதி இரண்டு வாரங்களில் நான் தான் பதில் பாதுகாப்பு அமைச்சர். இறுதிப் போரில் பின்நோக்கி நகரும் விடுதலைப் புலிகள் தென் இந்தியாவின் சென்னை அல்லது, வேறு ஒரு இடத்தில் இருந்து வந்து கொழும்பை முற்றாக அழிக்க, விமானத்தில் இருந்து குண்டு வீச போகின்றனர் என தகவல் கிடைத்திருந்தது. இதன் காரணமாகவே அனைவரும் வெளிநாடுகளுக்கு சென்றனர்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

எனினும் ஜனாதிபதியின் இந்த கருத்து புதிய செய்தி. நான் அறிந்திருக்காத தகவல் ஒன்றையே ஜனாதிபதி கூறியுள்ளார் என கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

இது நான் அறிந்திருக்காத செய்தி. எனக்கு அப்படியான தகவல் எதுவும் கிடைத்திருக்கவில்லை. நான் இலங்கையிலேயே இருந்தேன். வெளிநாடுகளுக்கு சென்றிருக்கவில்லை.

இலங்கை இராணுவம் போர் குற்றம் செய்ததாக பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியது போல், அவர் போருக்கு அரசியல் ரீதியான தலைமைத்துவத்தை வழங்கிய காலத்துடன் இது சம்பந்தப்பட்டுள்ளதால், சர்வதேச ரீதியில் சுமத்தப்படும் இந்த குற்றச்சாட்டில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டியது ஜனாதிபதியின் பொறுப்பு எனக் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *