ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் சாதனை துளிகள்…..

இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 48.3 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 121 ரன்கள் குவித்தார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி ஆட்டத்தின் கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் ஷர்மா 48 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் இந்திய அணி ஆசிய கோப்பையை 7-ஆவது முறையாக கைப்பற்றியது.

 

இப்போட்டியில் செய்யப்பட்ட சாதனை விவரங்கள் பின்வருமாறு:

இந்திய அணி 7-ஆவது முறையாக ஆசியக் கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் அதிக முறை ஆசிய கோப்பையை வென்ற அணியாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

வங்கதேச துவக்க வீரர் லிட்டன் தாஸ், சர்வதேசப் போட்டிகளில் முதன்முறையாக சதம் அடித்தார்.

2001 ஜூன் மாதத்துக்கு பிறகு நடைபெற்ற இறுதிப் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிவேக சதங்களின் வரிசையில் லிட்டன் தாஸின் சதம் 7-ஆவது இடத்தைப் பிடித்தது. அதுபோன்று ஆசிய கோப்பை இறுதிப் போட்டிகளில் 3-ஆவது அதிவேக சதமாகவும் அமைந்தது.

லிட்டன் தாஸின் 121 ரன்கள் இறுதிப்போட்டிகளில் வங்கதேச சத வீரர் அடித்த அதிகபட்ச ரன்களாகவும் அமைந்தது. மேலும் இறுதிப்போட்டிகளில் வங்கதேச வீரர் அடித்த முதல் சதமாகும்.

முதல்தர கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் (130) செய்த வீரர்கள் வரிசையில் தோனி 2-ஆவது இடத்துக்கு முன்னேறினார்.

3 அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்ற தொடரின் இறுதிப் போட்டிகளில் வங்கதேச அணி 6-ஆவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டது.

  • 2009-ல் இலங்கைக்கு எதிராக 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி (முத்தரப்பு தொடர்)
  • 2012-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 2 ரன்களில் தோல்வி (ஆசிய கோப்பை)
  • 2016-ல் இந்தியாவுக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி (ஆசிய கோப்பை)
  • 2018-ல் இலங்கைக்கு எதிராக 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி (முத்தரப்பு தொடர்)
  • 2018-ல் இந்தியாவுக்கு எதிராக 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி (நிதாஹஸ் தொடர்)
  • 2018-ல் இந்தியாவுக்கு எதிராக 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி  (ஆசிய கோப்பை)

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த கீப்பர்கள் வரிசையில் தோனி 3-ஆவது இடத்தைப் பிடித்தார்.

  • மார்க் பௌச்சர் – 998
  • ஆடம் கில்கிறிஸ்ட் – 905
  • மகேந்திர சிங் தோனி – 800

லிட்டன் தாஸ், மெஹிதி ஹாசான் ஜோடி ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்தது. மேலும் இலங்கைக்கு அடுத்ததாக ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்த ஜோடி என்ற வரலாற்றையும் படைத்தது.

ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக சதமடித்த 3-ஆவது வங்கதேச வீரராக லிட்டன் தாஸ் இடம்பெற்றார். முன்னதாக, 2008-ல் அலோக் கபாலி 115 மற்றும் 2014-ல் முஷ்ஃபிகுர் ரஹீம் 117 ரன்கள் எடுத்துள்ளனர்.

லிட்டன் தாஸ் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் சதமடித்த 5-ஆவது வீரர் ஆவார்.

ஒருநாள் போட்டிகளின் இறுதிப் போட்டிகளில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டையும் துவக்கி வைத்த 5-ஆவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார் மெஹதி ஹாசன். முன்னதாக, மனோஜ் பிரபாகர் (3 முறை), நீல் ஜான்சன், கிறிஸ் கெயில், முகமது ஹஃபீஸ் ஆகியோர் இச்சாதனையைப் படைத்துள்ளனர்.

நன்றி – தினமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *