வடக்கு அமைச்சர்கள் விடயத்தில் இனி சமரசம் கிடையாது! – அவைத் தலைவர் அறிவிப்பு

“வடக்கு மாகாண அமைச்சர்கள் விடயத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தைத் தீர்ப்பதற்குச் சபை சார்பில் எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளன. ஆகவே, இனிமேலும் அத்தகைய சமரச முயற்சியை முன்னெடுக்கப் போவதில்லை” என்று அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் 132 ஆவது அமர்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது வடக்கு அமைச்சர்கள் யார் என்பதில் சர்ச்சை ஏற்பட்டு வாதப்பிரதிவாதங்களும் நடந்தன. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அவைத் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“மாகாண அமைச்சர்கள் விடயத்தில் சபையில் குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது. அதனைத் தீர்ப்பதற்குப் பல நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டிருந்தோம். ஆனால், அந்த முயற்சிகள் எல்லாம் வெற்றியளிக்கவில்லை. இதில் இறுதியாக எடுத்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை என்பது உண்மைதான்.

ஆகவே, இனிமேலும் சபை சார்ந்து நானாகச் சமரச முயற்சிகளை முன்னெடுக்கவேண்டிய தேவை இல்லை.

இந்த விடயத்தில் எனது கடமையும் முடிவடைந்துவிட்டது. அமைச்சர்கள் விடயத்தில் ஏற்பட்டிருக்கின்ற சிக்கல்கள் சபைக்கு ஒரு கரும்புள்ளி என்று நான் முன்னர் தெரிவித்திருந்தேன். ஆனால், இந்தப் பிரச்சினை தீர்க்கப்படக்கூடிய வாய்ப்பு இருந்தும் அதனைத் தவறவிட்டுள்ளதால் அது ஒரு கரும்புள்ளியாகவே வந்துவிடுமோ தெரியவில்லை.

வடக்கு மாகாண சபை என்பது எங்களுடைய உணர்வுபாற்பட்ட சபை. ஆகவே இந்தச் சபையை முதலாவதாகப் பொறுப்பெடுத்த நாங்கள் அதனைச் சரியாக நடத்தவேண்டும். நிர்வாகம் செய்யத் தெரியாதவர்கள் என்ற கேள்வி எழவே கூடாது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *