8 உண்ணாவிரதக் கைதிகள் குறித்து 3 தினங்களுக்குள் தீர்க்கமான முடிவு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் குறித்தும் இரண்டொரு தினங்களில் தீர்க்கமான – சாதகமான முடிவொன்றை வழங்குவதாக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் உறுதிபடத் தெரிவித்தார்.

அத்துடன் ஏனைய அரசியல் கைதிகள் தொடர்பிலும் விரைவில் உறுதியான தீர்மானம் ஒன்றை ஜனாதிபதியுடன் பேசி எடுப்பது எனவும் இணக்கம் காணப்பட்டது.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் உட்பட சகல தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கான முக்கிய கூட்டம் ஒன்று நேற்று அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் கூட்டப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், கூட்டமைப் பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

அரச தரப்பில் பிரதமருடன் நீதி அமைச்சர் திருமதி தலதா அத்துக்கோரள, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பில் பங்கேற்ற கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், “அரசியல் கைதிகளின் விவகாரம் கடந்த 10 வருடங்களாக இழுபட்டுச் செல்கிறது. ஜே.வி. பினருக்குப் பொதுமன்னிப்பு வழங்கியது போல தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பை அரசு வழங்கியிருக்க முடியும். ஆனால், இந்த விடயத்தில் அரசு தொடர்ச்சியாக இழுத்தடிக்கும் போக்கில் செயற்பட்டு வருகின்றமையை ஏற்க முடியாது” என்று காரசாரமாகக் கருத்து வெளியிட்டார்.

இதற்குப் பதில் அளித்த சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, “அரசியல் கைதிகளின் பெரும் பகுதியினர் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். பாரதூரமான குற்றமிழைந்தவர்களே உள்ளனர்” – என்றார்.

இதற்குப் பதிலடி கொடுத்த சம்பந்தன், “விசேட நீதிமன்றம் ஒன்று அநுராதபுரத்தில் அமைக்கப்பட்டது. மூன்று வருடங்கள் கடந்தும் அங்கு ஒரு வழக்குக்கூட நடத்தப்படவில்லை. பாரதூரமான குற்றச்சாட்டுக்களுடன் பெரிதாகத் தொடர்பில்லாதவர்கள் மீதாவது விசாரணை நடத்தி இருக்கலாம். அரசியல் கைதி ஒருவரின் வழக்கு ஐந்து வருடங்களாக விசாரணைக்கே எடுக்கப்படாமல் உள்ளது” என்று விசனத்துடன் கருத்து முன்வைத்தார்.

இதன்போது கருத்துக் கூறிய சட்டமா அதிபர், “அரசியல் கைதிகள் சகலருடைய கோவைகளையும் பார்வையிட்டு அவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவுள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.

உடனே குறுக்கிட்ட சம்பந்தன், “கோவைகளை பார்வையிடுவதில் தொடர்ந்தும் காலத்தை கடத்துவதை விடுத்து நடவடிக்கைகளே தேவை” என வலியுறுத்தினார்.

இதனையடுத்து இந்தச் சந்திப்பில் மூன்று முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

* உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 8 அரசியல் கைதிகள் தொடர்பிலும் இரண்டொரு தினங்களில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது.

* வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் உள்ளவர்கள் உட்பட ஏனைய அரசியல் கைதிகள் தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நீதி அமைச்சில் கூட்டம் ஒன்றை நடத்துவது எனவும், அதில் நீதி அமைச்சர், கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி., சட்டமா அதிபர் ஆகியோர் பங்கேற்று முடிவொன்றை எடுப்பது எனவும் கூறப்பட்டது.

* பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் அவருடன் பேச்சு நடத்தி அரசியல் தீர்மானமொன்றை மேற்கொள்வது என பிரதமர் ரணில் யோசனை முன்வைத்தார்.

தண்டனை பெற்ற அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் அவர்கள் தமது மேன்முறையீடுகளை மீளப் பெறத் தயாராகவுள்ளனர் என சுமந்திரன் எம்.பி. இதன்போது எடுத்துரைத்தார்.

ஜனாதிபதியுடன் இணைந்து இது குறித்து பேசி முடிவு எடுப்பது என நேற்றைய கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *