மஹிந்த – கோட்டாவை வறக்காப்பொலைக்கு அழைக்க நாமல்குமார போட்ட திட்டம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவையும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவையும் வறக்காப்பொலைப் பகுதிக்கு வரவழைப்பதற்கு நாமல் குமார பல தடவைகள் முயற்சித்துள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவையும் கொலை செய்வதற்கு சூழ்ச்சிச் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் – அதற்குத் திட்டம் தீட்டினார் எனக் கூறப்படும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வாவின் குரல் பதிவையும் பகிரங்கமாக அம்பலப்படுத்தி தெற்கு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டுள்ளார் ஊழல் எதிர்ப்பு அமைப்பின் செயற்பாட்டுப் பணிப்பாளர் நாமல் குமார.

இது தொடர்பில் உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதுடன், நாமல் குமாரவுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆளும், எதிரணி அரசியல் உறுப்பினர்களும் பல கோணங்களில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இதற்கு சமாந்தரமாக இந்தியப் பிரஜையொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதால் பலகோணங்களில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

“வறக்காப்பொலைப் பகுதியில் விகாரை திறப்பு விழாவொன்றுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவையும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரையும் பங்கேற்க வைப்பதற்கு நாமல் குமார முயற்சித்துள்ளார். இதற்காகக் கேகாலைப் பகுதியிலுள்ள பொது எதிரணியின் இளம் எம்.பி. ஒருவரின் உதவியையும் அவர் நாடியுள்ளார். நாமல் குமாரவின் கோரிக்கைக்கு அவர் சாதகமான பதிலை வழங்காததால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அழைத்து குறித்த நிகழ்வை நடத்தப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார். மூன்றரை மாதங்களுக்கு முன்னரே இந்தத் திட்டத்தை நாமல் குமார வகுத்துள்ளார்” என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *