தேர்தலுக்குத் தயாராகுங்கள்! – ‘யானைப் படை’க்குப் பிரதமர் கட்டளை

கிராம – தொகுதி மட்டத்திலான அரசியல் செயற்பாடுகளைப் பலப்படுத்தி மாகாண சபைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு தயாராகுமாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டமொன்று கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

கட்சியின் பொதுச்செயலாளர், தவிசாளர், தேசிய அமைப்பாளர் உட்பட உயர்மட்ட பிரமுகர்களும், தொகுதி அமைப்பாளர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது தொகுதி மட்டத்தில் நிலவும் கட்சி சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.

அத்துடன், புதிய தொகுதி அமைப்பாளர்கள் சிலரை நியமிக்கவும், ‘கம்பெரலிய’ மற்றும் சமுர்த்தி வேலைத்திட்டங்களின் ஊடாக கிராமமட்டங்களில் ஆழமாக காலூன்றுவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மாகாண சபைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு தயாராகுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் ஐ.தே.கவின் அரசியல் செயற்பாடுகள் சம்பந்தமாகவும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *