எமது பிரச்சினையை நாமே தீர்ப்போம்! வெளிநாட்டு அழுத்தம் தேவையில்லை! – ஐ.நாவில் மைத்திரி திட்டவட்டம்

“இலங்கையானது சுயாதீன நாடாகும். எனவே, வெளிநாட்டு அழுத்தங்களும், அச்சுறுத்தல்களும் எமக்கு அவசியமில்லை. எமக்குள்ள பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்வதற்கு ஐ.நாவும் உலக நாடுகளும் வாய்ப்பளித்து, ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.”

– இவ்வாறு ஐ.நா. கூட்டத்தொடரில் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரையின் ஒரு பகுதி வருமாறு:-

“இலங்கையானது நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கையை பின்பற்றும் நாடாகும். அணிசேரா அமைப்பில் ஆரம்பகால அங்கத்துவ நாடு என்பதுடன், அவ்வமைப்பின் மாநாடு 1976 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்றது. எனவே, சர்வதேச சமூகத்தில் இலங்கைக்கு எந்தவொரு எதிரி நாடும் கிடையாது.

இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில் – குறிப்பாக எனது மூன்றரைவருட ஆட்சியின்கீழ் போருக்கு பின்னர் செய்யவேண்டிய முக்கிய விடயங்கள் செய்யப்பட்டுள்ளன – செய்யப்பட்டு வருகின்றன.

ஒருமைப்பாட்டை பாதுகாத்து இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மீண்டுமொரு போர் ஏற்படாமல் இருக்கும் வகையிலான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் இன்னும் செயற்படவேண்டியுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐ.நாவிடமும், உலகநாடுகளிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

போர் முடிவடைந்துள்ள நிலையில் – முன்நோக்கிவரும் நாடு என்ற அடிப்படையில் இலங்கை தொடர்பில் புதிய கண்ணோட்டத்துடனும் – கருத்துடனும் பார்க்குமாறும், எமக்குள்ள பிரச்சினைகளை நாமே தீர்ப்பதற்கு வாய்ப்பளிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். வெளிநாட்டு அழுத்தங்களோ, அச்சுறுத்தலோ அவசியமில்லை” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *