ஈழத்தமிழர்களுக்கு தேவை ஒரு திலீபன்!

ஒரு வரலாற்றுத் திருப்புமுனையை ஏற்படுத்திய சரித்திர நாயகனின் நினைவு தினம் இன்றாகும். ஒரு கணத்தில் தம்மைத் தாமே சிதறடித்து, எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்தும் உயிராயுதங்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கொண்டிருந்த புலிகள் இயக்கத்திலிருந்து முகிழ்ந்த பிறிதொரு முத்து திலீபன். ஆயுத வழிப் போராட்டத்தை முன்னெடுத்த வீரர்கள் மத்தியில் அஹிம்சை வழியில் – அற நெறியில் தீரம் புரிந்த ஒப்புயர்வற்ற சாதனையாளன் அவன்.

மறவழியில் போரடும் மாமனிதர்கள் அற வழியிலும் – அஹிம்சை மார்க்க்த்திலும் – காந்தீய நெறியிலும் உச்சக்கட்ட ஈகத்தைப் புரியலாம் என்பதை உலகுக்கு நிரூபித்தவன் தியாகி திலீபன்.

அவனது சகாக்கள் அடுத்த கணத்தில் சாவை அரவணைக்கத் துணிந்து நின்றவர்கள். தம்மைத் தாமே நொடியில் தகர்த்து எதிரியை அடியோடு கலக்கியவர்கள் அவர்கள்.

ஆனால், திலீபன் இவர்களினின்றும் முற்றிலும் வேறுபட்டவன். அவனும் தனக்குத் தானே மரணதண்டனையை வழங்கும் பெரும் கொடையைச் செய்தவன்தான். தன்னைத் தானே சிலுவையில் அறையும் ஒப்பற்ற அர்ப்பணிப்பைப் புரிந்தவன்.

அவன் இந்த ஈகத்தைச் செய்வதற்காக அணு அணுவாக, நொடி நொடியாக அவஸ்தையை அனுபவித்து, சிறுகச் சிறுகச் செத்து, கணம் கணமாகப் பாடுகளைச் சுமந்தவன். அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல, 12 நாட்கள் தன் இனத்துக்காகத் தன்னை வருத்தி உயிர்த் தியாகம் செய்தவன்.

உண்ணாநோன்பிருப்பது மகத்தான காரியம் என்றால், சாகும் வரை அதைத் துணிவோடு, விடாது கடைப்பிடிப்பது மிகவும் மகத்தானது. அதையும் தாண்டி, உயிர் பிரியும் வரை ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல் நோன்பிருப்பது – கடைசி உயிர் மூச்சுப் பிரியும் வரை 12 நாட்கள் உடல் அவலத்தை அனுபவித்தபடி, மாறாத உறுதியோடு அத்தவத்தை இயற்றுவது – நினைத்துப் பார்க்கவே மனதை நடுங்கவும், நெருடவும் வைக்கும் மிக உன்னத தியாகம்.

நவீன உலகுக்கு அறவழிப் போராட்டத்தை – அஹிம்சை ஆயுதத்தை போதித்த மகாத்மா காந்தியால் கூட அந்த நெறிமுறையின் மீதான தன் உறுதியை – தீரத்தை – திடசங்கற்பத்தை திலீபனைப் போன்று செயலில் செய்து காட்டியிருக்க முடியுமா என்பது சந்தேகமே.

தன்னைத் தானே வருத்தி, அதன் மூலம் மற்றவர்களைத் தன் வழிக்குக் கொண்டுவரும் தந்திரோபாயப் போராட்ட மார்க்கமாக அஹிம்சை நெறியை வரித்துக் கொண்ட மகாத்மா காந்தி கூட, அந்த உத்தியின் ஒரு பகுதியாக மற்றவரின் சிந்தனையைத் தாம் ஆகர்ஷித்து, அவர்களைத் தன்வசப்படுத்துவதற்கான கால அவகாசத்தைப் பெறும் நோக்கோடுதான் தனது உண்ணாவிரதப் போராட்ட நடைமுறையை வகுத்துக் கொண்டார். அவர், உண்ணாநோன்பி ருந்தாரே தவிர, நீராகாரம் கூட அருந்தாமல் இருக்கவில்லை. அதனால் வாரக் கணக்கில் அவர் போராட்டங்கள் நீடித்தன. அதற்கிடையில் யாரை இலக்கு வைத்து அந்தப் போராட்டத்தில் குதித்தாரோ அவர்களின் மனதைக் கரையச் செய்யும் இலக்கை அவரால் அடைய முடிந்தது.

மகாத்மா காந்தி கூட எண்ணிப் பார்க்கத் துணியாத வகையில் – நெறியில் – ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல் தன் உண்ணா நோன்பை நோற்பது என்பது – அதனால் நேரும் உடல் அவஸ்தையை அனுபவித்துத் தாங்கிக் கொள்வது என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத உச்ச ஈகம். அந்த நோவை 12 நாட்கள் அணு அணுவாக அனுபவித்த பின்னர்தான் திலீபனின் ஆன்மா நம்மை விட்டுப் பிரிந்தது.

அவன் சாவுக்கும் அஞ்சவில்லை. சாவுக்கு முந்திய நோவுக்கும் அஞ்சவில்லை. தன் இனத்துக்காக, தான் வரித்துக் கொண்ட கொள்கைக்காக, தன்னையே ஆகுதியாக்கும் மனத்திடம் – மானுடம் – அவனிடம் இருந்தது. அத்தகைய ஒரு திலீபனே இன்று நமக்குத் தேவை.

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழலில், நமக்கு எஞ்சியிருக்கும் ஒரே மார்க்கம் – பாதை அறவழிப் போராட்டம்தான். ஆனால், அந்த அறவழிப் போராட்டத்துக்கு உறுதியாக நின்று, முன்மாதிரியாக வழிகாட்டும் தலைமை நம்மிடம் இல்லை. அஹிம்சை நெறிப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் வாய்ச் சவடால் விட்டு, வெறும் வாய் வீரம் காட்டும் வெற்று வேட்டுக்களே இன்று பெரும்பாலும் நம் மத்தியில் அரசியல் செய்கின்றன.

அறவழியிலும் உறுதியாக நின்று போராடி, தென்னிலங் கையின் ஆழ்மனதையே ஓர் உலுப்பு உலுப்பி, ஓர் அசைப்பு அசைத்து, வழிப்படுத்தி, நம் பக்கம் திருப்புவதற்கு ஓர் அறவழித் திலீபன் நமக்கு இன்று அவசியப்படுகிறான். கொள்கைப் பற்றும், விலை போகாப் பேராண்மையும், நெஞ்சுறுதியும், இவை எல்லாவற்றையும் தாண்டி, இனத்துக்காகத் தன்னுயிரையும் ஈய்ந்தளிக்கும் தற்றுணிவும்மிக்க ஒரு திலீபன் நமக்குத் தேவை.

இன்றைய நமது அரசியல் கூத்தை அமைக்கும் நடிப்பு சுதேசிகளுக்கு மத்தியில் அப்படி ஓர் உன்னத புருஷன் நமக்குக் கிட்டுவானா? சில விடிவெள்ளிகள் வரலாற்றில் ஒரு தடவை மட்டும்தானே தோன்றும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *