புலிகள் சார்பு புலம்பெயர் அமைப்புக்கு இலங்கைத் தூதரகத்தில் விருந்தளிப்பு!

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சார்பான அமைப்பொன்றுக்கு ஜெனிவாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இராப்போசன விருந்து வழங்கப்பட்டுள்ளமை குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் உடனடி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று நாடுகடந்த தேசப்பற்றுள்ள இலங்கை வாழ் மக்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்றுவரும் உலக நாடுகளின் மனித உரிமைகளை மீளாய்வு செய்யும் கூட்டத்தொடருக்குச் சமாந்தரமாக அரச சார்பற்ற அமைப்புகளின் ஏற்பாட்டில் உபகூட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையிலுள்ள கடும்போக்குடைய சிங்களத் தேசியவாத அமைப்புகளின் சார்பில் முன்னாள் கடற்படை அதிகாரி சரத் வீரசேகர பங்கேற்றுள்ளார்.

அத்துடன், போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் படையினருக்கு சார்பாகவும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு எதிராகவும் களமிறங்கியுள்ள அரசசார்பற்ற அமைப்புகளின் உபகூட்டத்தொடர்களில் பங்கேற்று உரையாற்றிவரும் வருகிறார்.

இந்நிலையில் இலங்கையிலுள்ள கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளுக்குச் சார்பாகச் செயற்படும் – உலகவாழ் தேசப்பற்றுள்ள இலங்கை மக்களின் ஒன்றியம் ஜெனிவாவில் நேற்று ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் பங்கேற்று உரையாற்றிய பேராசிரியர் ஜயசுமன என்பவர்,

“ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான ஆகிய நாடுகளில் அமெரிக்கப் படையினர் இன்னும் நிலைகொண்டுள்ளனர். இலங்கையில் போர்முடிவடைந்து தற்போது 10 வருடங்கள்தான் நிறைவடைந்துள்ளன. தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் விக்னேஸ்வரன், தொல்பொருள் இடங்களை அழிக்கும் சிறிதரன் ஆகியோர் இருக்கும்வரை இராணுவ முகாம்களை அகற்றவேக்கூடாது” என்று வலியுறுத்தினார்.

அதன்பின்னர் உரையாற்றிய மேற்படி அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான துசாந்தி கபுகொட,

“விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். அந்த அமைப்புக்கு சார்பாக செயற்படும் புலம்பெயர் அமைப்பொன்றுக்கு இலங்கை தூதரக அதிகாரிகள் இராப்போசன விருந்தளித்துள்ளனர். படையினருக்கு எதிராகச் செயற்படுபவர்களுக்கு எவ்வாறு இப்படி உபசரிப்பு வழங்குவது?

எனவே, இது குறித்து ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இது குறித்து ஆராய்ந்து, பின்னணியைக் கண்டறிவதற்காக உடனடி விசாரணையை ஆரம்பிக்கவேண்டும். அதுமட்டுமல்ல ஜெனிவாவிலுள்ள தூதரக அதிகாரிகளுக்கு புனர்வாழ்வளிக்கவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *