பிரபாகரனிடமிருந்தே தப்பிவிட்டேன்! மக்கள் பாதுகாப்பே எனக்குப் போதும்!! – கோட்டா கூறுகின்றார்

“பிரபாகரனும் என்னைக் கொலை செய்வதற்குச் சூழ்ச்சி செய்தார். தற்போதும் அதே நிலைமை தொடர்கின்றது. உயிருக்கு அஞ்சினால் வாழ முடியுமா என்ன? ”

– இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ.

ஹங்கெல்ல பகுதியில் நேற்று நடைபெற்ற ஆன்மீக நிகழ்வொன்றின்பின்னர், ‘கொலை சூழ்ச்சித் திட்டம்’ குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு வினா தொடுத்தார் கோட்டா.

“எனக்குப் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அரசிடம் இன்னும் கோரவில்லை. மக்களின் பாதுகாப்பே எனக்குபோதும்.

பிரபாகரன் என்னைக் கொலை செய்யச் சூழ்ச்சி செய்தார். புண்ணியமாக நான் தப்பினேன். தற்போது மீண்டுமொரு சூழ்ச்சி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. எது எப்படியோ உயிருக்கு அஞ்சினால் வாழமுடியுமா என்ன?

எனது நிர்வாகக் காலத்தில் சிறப்பாக செயற்பட்ட அதிகாரிகளே பயங்கரவாத விசாரணைப் பிரிவிலும், சி.ஐ.டியிலும் இருக்கின்றனர். எனவே, சிறப்பாக செயற்பட்டு உண்மையை வெளிக்கொண்டு வருவார்கள் என நம்புகின்றேன்” என்றும் கோட்டா கூறினார்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகச் சந்தேகிக்கும் பட்சத்தில் அரசிடம் மேலதிக பாதுகாப்பைக் கோரலாம் என்று சட்டம், ஒழுங்கு அமைச்சு அறிவித்திருந்தது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே கோட்டா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *