உடல்நிலை மோசம்! உயிருக்கு ஆபத்து!! 8 உண்ணாவிரதக் கைதிகளையும் உடன் காப்பாற்ற வேண்டும் அரசு!!! – சம்பந்தன் வலியுறுத்து

“அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர்களில் நால்வர் அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் எமக்கு மிகவும் கவலையைத் தந்துள்ளது. அவர்களின் உயிருக்கு ஆபத்து எதுவும் நடந்தால் அது பெரும் விபரீதமாகிவிடும். எனவே, இந்த விடயத்தில் அரசு உடன் கவனம் செலுத்த வேண்டும். உண்ணாவிரதக் கைதிகளைக் காப்பாற்ற வேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகள் தம்மை குறுகிய கால புனர்வாழ்வு வழங்கியாவது விடுவிக்குமாறு கோரி கடந்த 14ஆம் திகதியிலிருந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் 4 பேர் அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேற்படி விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என உண்ணாவிரதக் கைதிகளின் உறவினர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோது,

“அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் 8 தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன் அவருடன் பேசியிருந்தேன். விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தேன். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் தான் உரையாற்றிவிட்டு நாடு திரும்பியவுடன் இந்த விடயத்துக்குத் தீர்வு காண்பேன் என்று அவர் என்னிடம் உறுதியளித்திருந்தார். எனினும், உண்ணாவிரதத் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர்களில் நால்வர் அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் எமக்கு மிகவும் கவலையைத் தந்துள்ளது. அவர்களின் உயிருக்கு ஆபத்து எதுவும் நடந்தால் அது பெரும் விபரீதமாகிவிடும். எனவே, இந்த விடயத்தில் அரசு உடன் கவனம் செலுத்த வேண்டும். உண்ணாவிரதக் கைதிகளைக் காப்பாற்ற வேண்டும்.

இதேவேளை, நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் விரைவில் சில நடவடிக்கைளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவுள்ளது” – என்று பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *