அரசியல் கைதிகள் போராட்டம்: நீதி அமைச்சர் தலதா கைவிரிப்பு

“பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தற்போது வழக்குத் தாக்கல் செய்யப்பபட்டுள்ளது. இவர்களின் விடுதலை தொடர்பில் நீதிமன்றங்களே தீர்மானிக்க வேண்டும். கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றார்கள் என்பதற்காக விசேட சலுகைகளை வழங்க முடியாது.”

– இவ்வாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.

“தேசிய அரசில் நீதித்துறை சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமமானவர்களே. அவ்விடயத்தில் அரசியல் கைதிகள் விதிவிலக்கல்ல” எனவும் அவர் குறிப்பிட்டார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமது விடுதலையை வலியுறுத்தி 8 தமிழ் அரசியல் கைதிகள் இன்று 12ஆவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பில் கேட்டபோதே நீதி அமைச்சர் தலதா அத்துகோரல மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து நீதி அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

“கடந்த கால அரசில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலர் பல கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறான செயற்பாட்டின் காரணமாக எவ்வித மாற்றங்களும் ஏற்படா.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தற்போது பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த அரச காலத்தில் இவர்கள் தொடர்பில் எவ்வித வழக்குகளும் தாக்கல் செய்யப்படாமல் சந்தேகத்தின் பெயரில் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். ஆனால், தற்போது நிலைமை மாற்றமடைந்துள்ளது. இவர்கள் விடயத்தில் அரசு முறையான சட்டமுறைகளையே பின்பற்றி வருகின்றது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் குறிப்பிடுவதைப் போன்று வழக்குகளைத் துரிதப்படுத்த முடியாது. அதற்கான சட்ட விதிமுறைகளுக்கு அமையவே செயற்பட முடியும். விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவர்களை நியாயமற்ற முறையில் தடுத்து வைக்க வேண்டிய எவ்வித அவசியமும் அரசுக்குக் கிடையாது. இருப்பினும் அனைத்து விதமான விசாரணைகளின் முடிவில் நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாகவே இவர்கள் விடுதலை செய்யப்படுவார்களே தவிர உண்ணாவிரதப் போராட்டங்களினால் அல்ல என்ற விடயத்தை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *