நல்லூர் தூபியில் திலீபனை நினைவேந்த தடையில்லை! – பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்தது யாழ். நீதிமன்றம்

யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் தூபியில் நிகழ்வை நடத்த இடைக்காலத் தடை விதிக்கும் பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்று நிரகாரித்தது.

நினைவுத் தூபியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலி மற்றும் பந்தலை அகற்றுவதற்கான இடைக்காலக் கட்டளையை வழங்கவும் நீதிமன்று மறுப்புத் தெரிவித்தது.

தூபியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பி வேலியை அகற்றுதல் மற்றும் நினைவேந்தல் அலங்காரப் பந்தலை அகற்றுவது தொடர்பான வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பி வேலியை அகற்றுவதற்கும், அங்கு திலீபனின் உருவப்படம் அமைக்கப்பட்டுள்ள அலங்காரப் பந்தலை அப்புறப்படுத்துவதற்கும் யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு உத்தரவிடுமாறு கோரி, யாழ். நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. யாழ். மாநகர சபை ஆணையாளர் மன்றில் முன்னிலையானார்.

அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி நீண்ட சமர்ப்பணத்தை மன்றில் முன்வைத்தார். பொலிஸ் அதிகாரியும் சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

“தியாகி திலீபனின் நினைவுத் தூபி அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு அரசு அனுமதியளித்துள்ளது. அந்தத் தூபியை அமைக்கும் முகவராகவே யாழ்ப்பாணம் மாநகர சபை உள்ளது. எனவே, திலீபனின் நினைவுத் தூபி விவகாரத்தில் யாழ். மாநகர சபையை நீதிமன்றுக்கு இழுக்க முடியாது” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் யாழ்.நீதிவான் நீதிமன்றில் தனது சமர்ப்பணத்தைச் செய்தார்.

இருதரப்பு சமர்ப்பணல்களையும் ஆராய்ந்த மன்று, எதிர்வரும் ஒக்ரோபர் 30ஆம் திகதி கட்டளை வழங்குவதாக அறிவித்து வழக்கை ஒத்திவைத்தது.

இதேவேளை, நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் கடந்த 10 நாட்களாக அஞ்சலி நிகழ்வை முன்னெடுக்கும் தரப்பினர் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சட்டத்தரணி கு.குருபரன் மன்றில் தோன்றி சமர்ப்பணம் செய்ய அனுமதி கோரினார்.

எனினும், வழக்கில் எதிராளியாகக் குறிப்பிடப்படாத தரப்புக்கு சமர்ப்பணம் முன்வைக்க மன்று அனுமதி மறுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *