ஆவா குழுவுக்கு முடிவு கட்ட களமிறங்கட்டும் இராணுவம்! – மஹிந்த அவசர ஆலோசனை

யாழ். குடாநாட்டில் ஆவா குழுவை ஒடுக்குவதற்காகப் பொலிஸார் உடனடியாக – அவசரமாக இராணுவத்தின் உதவியைக் கோரவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வலியுறுத்தியுள்ளார்.

“தெற்கில் வன்முறைக்குழுக்களை அடக்குவதற்கு எவரும் அனுமதி கோருவதில்லை. தேவையான நேரத்தில் படையினர் களமிறங்குவர். வடக்குக்கு மட்டும் தனிச்சட்டமா என்ன?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களை அடங்குவதற்குப் பொலிஸார், இராணுவத்தின் உதவியைக் கோரும் பட்சத்தில் – 48 மணி நேரத்துக்குள் ஆயுதக் குழுக்களை அடக்கிவிடமுடியும் என்று யாழ்.படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அண்மையில் அறிவித்திருந்தார்.

காலியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் யாழ். படைத் தளபதியின் இந்த அறிவிப்பு குறித்து முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் மஹிந்தவின் நிலைப்பாடு என்னவென்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர்,

“தெற்கில் வன்முறைக்குழுக்களை அடக்குவதற்கு எவரும் அனுமதி கோருவதில்லை. தேவையான நேரத்தில் படையினர் களமிறங்குவர். வடக்குக்கு மட்டும் தனிச்சட்டமா என்ன? எனவே, ஆவா குழு போன்ற சமூக விரோதக் குழுக்களை ஒழிப்பதற்குப் பொலிஸார் இராணுவத்தின் உதவியை அவசரமாகக் கோரவேண்டும்.

அதேவேளை, விடுதலைப்புலிகள் தொடர்பில் பேசிய விஜயகலாவுக்கு எதிராக இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதற்கு எதிராக சபையில் குரல் கொடுத்தவர்கள் வெளியே போடப்பட்டுள்ளனர். இதுதான் ஜனநாயகம், நல்லாட்சி” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *