சபை அமர்வுகளில் பங்கேற்க விமலுக்குத் தடை!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட எம்.பியும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸவுக்கு இரண்டு வாரங்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சபையில் இன்று முன்வைக்கப்பட்ட தடைவிதிக்கும் யோசனைக்கு ஆதரவாக 39 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.

சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று, 27-2இன் கீழான அறிவிப்பு ஆகியன முடிவடைந்த பின்னர், மேற்படி யோசனையை சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல அவையில் முன்வைத்தார்.

பொது எதிரணி வாக்கெடுப்பைக் கோரியது. இதன்படி வரிசைக் கிரமப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாக 39 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் யோசனைக்குச் சார்பாக வாக்களித்தனர்.

அதேவேளை, பொது எதிரணி எம்.பியான பிரசன்ன ரனவீரவுக்கு 4 வாரங்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற சம்பிரதாயங்களையும் நிலையியல் கட்டளையையும் மீறும் வகையில் செயற்பட்ட இவ்விரு எம்.பிக்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்குக் குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. இக்குழுவின் பரிந்துரையின் பிரகாரமே மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *