புனர்வாழ்வளிக்கப்பட்ட மகன் எட்டு வருடங்களாகச் சிறையில்! – தமிழ் அரசியல் கைதியின் தாய் கதறல்

“இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு எம்மிடம் கையளிக்கப்பட்ட எனது மகனை மீளக் கைதுசெய்து 8 ஆண்டுகளாக தடுத்து வைத்துள்ளனர்.”

– இவ்வாறு தமிழ் அரசியல் கைதியின் தாயான சூரியகாந்தி மாரிமுத்து கண்ணீருடன் தெரிவித்தார்.

“எமது பிள்ளைகளின் விடுதலைக்காகப் பல்கலைக்கழகச் சமூகம் , அரசியல் தலைமைகள், சிவில் அமைப்புக்கள் என அனைவரும் ஒன்றினைந்து குரல் கொடுக்கவேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“எனது மகன் சூரியகாந்தி ஜெயச்சந்திரன் (வயது 42) இறுதிப் போரின்போது இராணுவத்திடம் சரணடைந்தார். சுமார் ஒரு வருட காலமாகப் புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுப் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் கடந்த 05.04.2010 அன்று எம்மிடம் கையளிக்கப்பட்டார்.

எம்மிடம் கையளிக்கப்பட்ட நாள் முதல் வீட்டுக்கு இராணுவத்தினர், புலனாய்வாளர்கள், வந்து விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். அதனால் மகனுக்குத் திருமண ஏற்பாடு செய்தோம். மகனுக்குத் திருமணப் பேச்சுக்கள் முற்றுப் பெற்றுத் திருமண நிச்சயதார்த்தம் நிச்சயிக்கப்பட்டது.

இந்நிலையில் 25.09.2010 அன்று வீட்டுக்கு வந்து எனது பிள்ளையை கைது செய்து கொண்டு சென்றனர். இன்றுவரை அவரை விடுதலை செய்யாது அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ளனர்.

எனது பிள்ளைக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒரு வழக்கு முடிவடைந்துள்ளது. மற்றைய வழக்கு நீண்ட காலமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

எனது மகனைத் துரித நடவடிக்கை எடுத்துச் சிறிய காலம் புனர்வாழ்வு அளித்தேனும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எனக்கு ஐந்து பிள்ளைகள். சிறையில் உள்ளவர் நான்காவது பிள்ளை. மற்றைய பிள்ளைகள் திருமணம் முடித்து வாழ்கின்றனர்.

சிறையில் உள்ளவர் விழுப்புண் அடைந்து நடக்க முடியாது உள்ளவர். அவருக்குத் திருமணம் நிச்சயித்த பெண் கூட வேறு திருமணம் செய்யாது என் பிள்ளைக்காகக் காத்திருக்கிறார்.

எனவே, எமது பிள்ளைகளைப் பொது மன்னிப்போ , சிறிய கால புனர்வாழ்வு அளித்தோ விடுவிக்கவேண்டும் எனக் கோருகிறோம். எமது பிள்ளைகளின் விடுதலைக்காகப் பல்கலைக்கழகச் சமூகம் அரசியல் தலைமைகள், சிவில் அமைப்புக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுங்கள்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *