விக்கி தரப்பு பூர்வாங்க ஆட்சேபனை! – அவர் பக்க வாதத்தை அடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒக்.16 இற்கு ஒத்திவைப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடுத்த மாதம் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்குத் தொடர்பில் நீதிமன்றத்தின் நியாதிக்கம் சம்பந்தமாக முதல்வர் விக்னேஸ்வரன் தரப்பில் பூர்வாங்க ஆட்சேபனை கிளப்பப்பட்டமையை அடுத்து, அது தொடர்பான விசாரணை நேற்றுக் காலை முழு நேரமும் நடை பெற்றது. அந்த விடயத்தைத் தொடர்ந்து விசாரிப்பதற்காக அடுத்த மாதம் 16 ஆம் திகதிக்கு வழக்குத் திகதியிடப்பட்டது.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் டெனீஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசர்கள் ஜனக் டி சில்வா, குமுதினி விக்கிரமசிங்க ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு முதல்வர் விக்னேஸ்வரன் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட் டத்தரணி கனகேஸ்வரன் கோரினார். அந்தக் கோரிக்கை நீதியரசர்களால் நிராகரிக்கப்பட்டு, வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

குற்றம் சுமத்தப்பட்ட முதல்வர் விக்னேஸ்வரன், மாகாண அமைச்சர்கள் சிவநேசன், அனந்தி சசிதரன் ஆகியோருக்கு நீதிமன்ற குற்றப்பத்திரத்தைக் கையளித்து குற்றவாளியா, சுற்றவாளியா என வினவத் தீர்மானிக்கப்பட்டது.

அப்போது முதல்வரின் சட்டத்தரணி கனகேஸ்வரன் இந்த வழக்கை விசாரிப்பதற்கு இந்த நீதிமன்றத்துக்கு நியாதிக்கம் இல்லை என்று அடிப்டையில் தாம் பூர் வாங்க ஆட்சேபனை ஒன்றைக் கிளப்புகின்றார் எனத் தெரிவித்தார்.

அந்த ஆட்சேபனையைப் பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள், அதன் மீது மூத்த ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் வாதாடி, சட்ட ஆதராங்களை முன்வைக்க அனுமதி அளித்தனர்.

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை எப்படி நடத்துவது என்பது தொடர்பான படிமுறைகள், சட்ட ஏற்பாடுகள், நடைமுறை ஒழுங்கு விதிகள் என்பன இன்னும் வகுக்கப்படவில்லை. அப்படி வகுக்கப்படாத நிலையில் அவமதிப்பு வழக்குகளை உயர் நீதிமன்றமோ, மேன்முறையீட்டு நீதிமன்றமோ கையாள முடியாது என்ற அடிப்படையில் தமது வாதத்தை ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் நேற்றுக் பகல் முழுவதும் முன்வைத்தார்.

“அப்படியானால் இலங்கை உயர்நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரணை செய்யவே முடியாதா? இதுவரை காலமும் அத்தகைய வழக்குகள் இந்த நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு காலத்துக்கு காலம் தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளனவே!” – என்று நீதியரசர்கள் சுட்டிக்காட்டினார்.

அது தவறு என்று பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன், “நீதிமன்ற நடைமுறைக்கான சட்டக் கோவையோ, சட்டங்களோ இல்லாமல் இத்தகைய வழக்குகளை விசாரிக்க முடியாது என்பதை முன்னைய வழக்குகளில் சம்பந்தப்பட்டோர் கவனியாமல் விட்டிருக்கலாம். ஆனால், நான் இதனை இப்போது நீதிமன்றத்தில் எமது வாதமாக முன்வைக்கிறோம்” என்றார் அவர்.

அவரது வாதத்தை செவிமடுத்த நீதியரசர்கள் வழக்கை எதிர்வரும் ஒக்ரோபர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.

அன்றைய தினம் இந்தப் பூர்வாங்க ஆட்சேபனை மீது மற்றைய இரு எதிர்மனுதாரர்களான அனந்தி சசிதரன், சிவநேசன் ஆகியோரின் சட்டத்தரணிகளும் மற்றொரு எதிர்மனுதாரரான டாக்டர் சத்தியலிங்கத்தின் தரப்பு சட்டத்தரணியான எம்.ஏ.சுமந்திரனும் வாதம் செய்வர்.

அதன் பின்னர் இந்தப் பூர்வாங்க ஆட்சேபனை நீதிமன்றத்தின் முடிவின் அடிப்படையில் வழக்கு விசாரணை தொடரும் எனத் தெரியவருகின்றது.

நேற்றை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் ஏனைய இரு மாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன், சிவநேசன் ஆகியோரும் மனுதாரரான டெனீஸ்வரனும் மன்றில் முன்னிலை ஆனார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *