போராலும் விலையேற்றத்தாலும் சுருங்கும் மக்கள்! ஏமன் குழந்தைகள் தாங்கிவரும் சித்திரவதைகள்!!
ஏமனில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாகவும், விலைவாசி ஏற்றம் காரணமாகவும் 50 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் உணவில்லாமல் தவித்து வருவதாக ‘சேவ் தி சில்ட்ரன்’ என்ற தனியார் சமூக சேவை நிறுவனம் எச்சரித்துள்ளது.
லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் குறித்த சமூக சேவை நிறுவனம், இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“உள்நாட்டுப் போர் நடந்துவரும் ஏமனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இலட்சக்கணக்கான குழந்தைகள் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் சமீப காலமாக நிலவும் விலைவாசி ஏற்றம் காரணமாகவும் ஏமனில் உணவில்லாமல் தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கியுள்ளது.
பல குழந்தைகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் உடல் மெலிந்து அடுத்த வேளைக்கான உணவு கூட இல்லமால் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவின் தலவைர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் தலைவர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
இப்போரில் இதுவரை 11,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 5,000 பேர் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.