தமிழர்களுக்கு இந்தியாவின் உதவிகள் தொடரவேண்டும்! – யாழில் தமிழக அமைச்சரிடம் மாவை எம்.பி. கோரிக்கை

“தமிழ் மக்களுக்கு இந்தியா செய்த – செய்து வருகின்ற உதவிகள் அளப்பரியவை. அதனை நாங்கள் மறக்கவில்லை. அதற்காக நன்றிகளையே கூறுகின்றோம். அத்துடன் தொடர்ந்தும் உதவிகளை இந்தியா வழங்கவேண்டுமென்று கேட்கின்றோம்.”

– இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா.

தமிழக அரசினால் யாழ். பொது நூலகத்துக்கு 50ஆயிரம் நூல்கள் கையளிக்கும் நிகழ்வு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலையே மாவை எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாண நூலகம் ஆசியாவின் சொத்தாக இருந்தது. ஆனால், அது கடந்த 1981 ஆம் ஆண்டு எரிக்கப்பட்டது. தமிழர்களின் வரலாற்றில் கறைபடிந்த நாளாக அந்த நாள் மாறியது. அவ்வாறு நூலகம் எரிக்கப்பட்டதால் அங்கிருந்த நூல்கள் அனைத்தும் எரிந்ததுடன் நூலகமும் கருகியது. ஆனால், அதற்குத் தற்போது வர்ணப் பூச்சு பூசப்பட்டுள்ளது. ஆனாலும், அதன் மூலம் வரலாற்றை மறைத்துவிட முடியாது.

தமிழ் மக்களின் கல்வி உச்ச நிலையில் இருந்தபோது அந்தக் கல்வியை அழித்துவிடுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியே நூலக எரிப்பு ஆகும். 90ஆயிரம் நூல்களைக் கொண்ட நூலகம் எரிக்கப்பட்டது. அது இலகுவாகக் கட்டியெழுப்பக்கூடியதல்ல. அதற்காகப் புத்தகங்களை வழங்கும் இந்தியாவின் இத்தகைய உதவிகள் மிகப் பெரியவை. இதனைக் கொண்டு வந்து கையளிக்கும் அமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் நன்றிகளை நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவ்வாறு இந்தியா எங்களுக்குப் பல உதவிகளை வழங்கியிருக்கின்றது. குறிப்பாக எம்.ஜி.ஆர் காலத்தில் இங்கிருந்து இடம்பெயர்ந்து தமிழகம் சென்றவர்களுக்குக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கல்வி பயிலுவதற்குச் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. அவ்வாறு அனுமதிகள் வழங்கியதை நாங்கள் மறக்கவில்லை. அதற்கும் நாங்கள் நன்றிகளையே கூறுகின்றோம்.

அதேபோன்று எமது மாணவர்களுக்கு இங்குள்ள தூதரகம் ஊடாக புலமைப் பரிசில்களை இந்தியா வழங்கி வருகின்றது. அழிந்துபோன தேசத்தில் கல்வியை உயர்த்துவதற்காக இந்தியா செய்கின்ற இத்தகைய உதவிகள் அளப்பரியவை” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *