காணி உரிமையைப் பெற மக்களும் களமிறங்கவேண்டும்! திலகர் எம்.பி. அறைகூவல்

“இலங்கை நாட்டில் ஆண்டாண்டு காலம் வாழ்ந்தும் நிலவுரிமையற்ற சமூகமாக வாழ்ந்த மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு இப்போதுதான் சிறுக சிறுக காணியுரிமை கிடைக்கப்பபெறுகின்றது.


அமைச்சரவை அனுமதியுடன் அவை கிடைக்கப்பெறுகின்றபோதும் அதனைப் பெற்றுக்கொள்வதில் நிர்வாக மட்டத்தில் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே, கிடைக்கக் கூடிய காணிகளை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கும் அதில் இடம்பெறும் வீடமைப்புகளை துரிதப்படுத்திக்கொள்ளவும் மக்கள் அர்ப்பணிப்போடும் செயற்படல்வேண்டும்’’.

– இவ்வாறு தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர் நாயகமும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

நோர்வூட் பிளரதோல் தோட்டத்தில் இந்திய வீடமைப்புத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அமைச்சர் திகாம்பரம் தலைமையில் இடம்பெற்றது.

இந்திய உதவி உயர்ஸ்தாணிகர் திரேந்தர் சிங், செயலாளர் ரமேஸ் அய்யர், மத்தியமாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொண்ட மேற்படி நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“மலையகத்தில் ஆண்டாண்டு காலமாக அரசியல் எனும் பெயரில் நாடகமாடி வந்தவர்களுக்கு மத்தியில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் வருகை புத்தெழுச்சியை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக மலையகப் பெருந்தோட்ட மக்களின் காணியுரிமையை வென்றெடுப்பதிலும் தனி வீடமைப்பு திட்டத்தை முன்வைப்பதிலும் கூட்டணி அரப்பணிப்போடு செயற்பட்டுவருகின்றது.

அரசாங்கத்திடம் காணியுரிமையை உரிய அமைச்சரவை அனுமதியூடாகப் பெற்றுக்கொண்டுள்ள போதிலும் நடைமுறையில் தோட்ட நிர்வாகங்களிடம் காணிகளைப் பெற்றுக்கொள்ளும்போது பல சவால்களையும் பிரச்சினைகளையும் நாம் சந்திக்க வேண்டியுள்ளது.


பல இடங்களில் பொருத்தமற்ற காணிகளையே ஒதுக்கீடு செய்கின்றனர். அந்த நேரங்களில் மக்கள் பிரதிநிதி என்றவகையில் நேரடியாக களத்தில் இறங்கி காணிகளை அவதானித்து பேசி பெற்றுக்கொடுப்பதுண்டு.

அந்தவகையில் இந்த பிளரதோல் தோட்டத்துக்கு வந்தபோது பொதுமக்களுக்களின் வீடமைப்புக்காக ஒதுக்க்பட்டிருக்கும் காணி கற்பாறைகள் நிறைந்ததாக காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. ஏனைய பகுதிகளில் தேயிலை நன்றாக விளையும் காணிகளே காணப்படுவதாகவும் காரணம் கூறப்பட்டது.

தேயிலை விளையும் காணிகளை கட்டயாமாக மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என நாங்களும் கோரவில்லை. அது நியாயமும் இல்லை. ஏனெனில் அது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடியது. ஆனால், வீடமைப்புத் திட்டங்களை தாமதப்படுத்தும் நோக்கிலோ காலம் கடத்தும் நோக்கிலோ இவ்வாறு செயற்பட்டால் அதனை அனுமதிக்க முடியாது.

இந்திய வீடமைப்புத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த இந்திய அரசாங்கம் வீடமைப்புக்கான நிதியினை மாத்திரமே கூட்டுறவு சங்கங்களின் ஊடாக பெற்றுக்கொடுக்கின்றது. அதேநேரம் வீடமைப்பு காணியை பெற்றுக்கொடுப்பதோடு அதன் நிலத்தாயரிப்பு பணிகளுக்காகவும் அமைச்சர் திகாம்பரத்தின் அமைச்சு தலா ஒரு லட்சத்து இருபதினாயிரம் ரூபாவை செலவிடுகின்றது. இதில் தோட்டக் கம்பனிகள் தலா முப்பதினாயிரம் ரூபாவை பங்களிப்பு செய்கின்றன.

கற்பாறைகள் நிறைந்த காணித்துண்டுகளை வீடமைப்புக்காக தோட்ட நிர்வாகங்கள் வழங்க முன்வத்தால் அவற்றை அகற்றி சுத்தப்படுத்த ஏற்படும் மேலதிக செலவினங்களையும் அவர்களே ஏற்கவேண்டும். அமைச்சரவை அனுமதிபெற்ற ஒரு தொகைக்கு மேலதிகமாக அமைச்சினால் நிதி ஒதுக்க முடியாது. எனவே தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்கள் தமது கம்பனிக்காக வழங்கியுள்ள சேவையை மதித்து மேலதிக செலவினை ஏற்று அதனை செய்துகொடுக்க முன்வரவேண்டும். இதனையே பிளரதோல் காணிப் பங்கீட்டில் நான் வேண்டுகோளாக முன்வைத்தேன்.

பொது மக்களும் அவர்கள் தற்போது வாழும் இடங்களுக்கு அருகாமையிலேயே காணிகளை எதிர்பார்ப்பது சாத்தியமற்றது. கோயில்கள், சர்ச்சுகள் என அதனை மையப்படுத்தி சில தோட்டங்களில் பொதுமக்கள் காணிகளை கோரி நிற்கின்றனர். இத்தகைய காரணங்களை காட்டி காணி பெறுவதை தாமதமாக்கவேண்டாம் எனும கோரிக்கையையும் நாம் மக்களிடத்திலே முன்வைக்க வேண்டியுள்ளது.

காணி வழங்குதலையும், வீடமைப்பை உருவாக்குவதிலும் தாமதத்தை ஏற்படுத்துவதிலும் குறியாக இருக்கும் கூட்டத்தினருக்கு இது வாய்ப்பானதாகிவிடும். 50 வீடுகளைக் கொண்ட புதிய கிராமம் ஒன்று அமையும்போது ஏனைய வசதிவாய்ப்புகள் அந்த சூழலை நோக்கி தானாக அமையும் என்பதை மனதிலே கொள்ள வேண்டும். அதற்கான உட்கட்மைப்பு வசதிகளையும் இட ஒதுக்கீடுகளையும் கூட நாம் செய்துவருகிழன்றோம். டன்சினன் வீடமைப்புத்திட்டம் இதற்கு நல்ல உதாரணம் ஆகும் “ என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *