முட்டாள் கருத்துக்கு பதிலளிக்கமாட்டேன்! – ஆட்டத்தை ஆரம்பித்தகையோடு கணபதிக்கு திகா சாட்டையடி

”முட்டாள் தனமான கருத்துகளுக்கு பதிலளிக்கமாட்டேன்.”- என்று அமைச்சர் பழனி திகாரம்பரம் தெரிவித்தார்.
இ.தொ.காவின் உபதலைவர் கணபதி கனகராஜுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் மேற்படி கருத்தை முன்வைத்தார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சராக பழனி திகாம்பரம்  தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
” கூட்டுஒப்பந்தப் பேச்சுகளிலிருந்து இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ் வெளியேற வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கையாக இருக்கின்றது. இதைதான் வலியுறுத்தியிருந்தேன்.
இதுதொடர்பில் கணபதி கனகராஜ் என்பவர் விளக்கம் கேட்டுள்ளார். அன்று கூட்டுஒப்பந்தத்தை அடிமை சாசனம் என்று விமர்சித்த அவர் இன்று விளக்கம் கோருவது  புரியாத புதிராக இருக்கின்றது. முட்டாள் தனமான கருத்துகளுக்கு நான் பதிலளிக்கமாட்டேன்.
மலையக மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். இனியும் எடுப்பேன்.  நிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தித் திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.
அதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போலி பிரசாரம் முன்னெடுத்துவருகின்றது. இருந்தாலும் சம்பளப் பிரச்சினைக்காக தொழிலாளர் நலன்கருதி இணைந்து செயற்பட நாம் தயாராகவே இருக்கின்றோம்.” என்றார்.
இந்நிகழ்வில் தமிழ் முற்போக்குக்கூட்டணியின் பிரதித் தலைவர் வீ. இராதாகிருஸ்ணன், நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம். உதயகுமார், சரஸ்வதி சிவகுரு, அமைச்சின் செயலாளர், அமைச்சின் உத்தியோகஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *