எங்களுடைய வழிமுறைகளை மாற்றும் நேரம் வந்துவிட்டது! – கூட்டமைப்பு அதிரடிக் கருத்து

புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி உள்ளிட்ட அரசுடனான உறவுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை பின்பற்றி வந்த அணுகுமுறைகளை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

இந்த அரசின் ஆட்சிக் காலம் முடிவடையவுள்ளதாலேயே, தமது போக்கில் – வழிமுறையில் சற்று மாற்றம் செய்யவேண்டிய நிலை எழுந்துள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது தெரிவித்துள்ளது.

“நாங்கள் தற்போது அணுகுமுறையை சற்று மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. ஏனென்றால் இந்த ஆட்சியின் காலம் முடிவடையப் போகின்றது. நாங்கள் எங்கள் அணுகுமுறைகளை சற்று மாற்றுவோம்” என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

க­ர­வெட்டி பிர­தேச சபை மண்­ட­பத்தில் நேற்று சனிக்கி­ழ­மை தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. பருத்தித்துறை பிரதேச சபை உப தவிசாளர் கு.தினேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.சா.அரியகுமார், பருத்தித்துறை நகர சபைத் தலைவர் யோ.இருதயராஜா, கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் த.ஐங்கரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான ச.சுகிர்தன், க.தர்மலிங்கம், வி.சிவயோகம் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றும்போது தெரிவித்ததாவது:-

“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் 2001ஆம் ஆண்டு நிகழ்த்திய மாவீரர் தின உரையில், உள்ளக சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வையும் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இதனாலேயே, 2002ஆம் ஆண்டு போர் நிறுத்தம் ஏற்பட்டது.

விபரீதமான விளைவு

நாங்கள் சுய­­­நிர்­ணய உரி­­மையைக் கொண்­டு­ள்­ளோம் என்­பதை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டது. ஆனால், தீர்வு கிடைக்கவில்லை. இதுவரை காலமும் இலங்கை சரித்திரத்தில் எதிரும் புதிருமாக இருந்த இரண்டு பிரதான கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டு அரசாக ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். கூட்டு அரசு என்று அவர்கள் ஒன்று சேர்வதற்கான காரணம் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதாகும். வேறு காரணம் கிடையாது. எதிர்க்கட்சி வரிசையில் இருந்து நாங்களும் எங்களின் ஆதரவைக் கொடுத்தோம். இது எங்களது மக்களின் வேணவா. இந்தத் தடவை இந்த முயற்சி பலனளிக்காவிட்டால் பெரிய எதிர்விளைவு ஏற்படும் என்பதனையும் நாங்கள் தொடர்ச்சியாக சொல்லி வந்திருக்கின்றோம்.

2000ஆம் ஆண்டு சந்திரிகா அரசு புதிய அரசமைப்பு வரைவைக் கொண்டு வந்தது. சிறப்பான அந்த வரைவு நாடாளுமன்றத்தில் வெற்றிபெற முடியாமல்போனது. இப்படிப் பல வழிகளில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் அல்லது வாய்ப்புக்கிட்ட வந்து தவறிப்போனது போன்ற நிலை ஏற்பட்டது. நகல் வரைவு வர முன்னர் இது வெற்றிபெறுமா என்ற எண்ணம் மக்களிடம் வந்துள்ளது. இதை எப்படி நம்புவீர்கள் என்று கேட்கின்றார்கள். நம்பிக்கையில்லாமல் ஒன்றும் செய்யமுடியாது. மாணவர்கள் பரீட்சையில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் பரீட்சை எழுதினால்தான் வெற்றிபெறமுடியும்.

என்ன செய்யப் போகின்றீர்கள்?

இன்று எமக்கு எதிராகப் பரப்புரை செய்கிறவர்கள் கூட இது வெற்றியளிக்காது எனப் பரப்புரை செய்கிறார்கள். நாங்கள் எங்களுக்கு எதிராகப் பரப்புரை செய்பவர்களைக் கேட்டுக்கொள்வது என்னவென்றால் மாற்றுவழி என்ன? அதனை வெளிப்படுத்துங்கள். வெறும் மேடைப் பேச்சுக்களின் மூலமோ, பத்திரிகைகளில் அறிக்கை விடுவதன் மூலமோ உணர்ச்சிவசமாக மக்களைத் தூண்டும் வகையில் செய்வதன் மூலமோ எதனையும் செய்யமுடியாது.

அஹிம்சை வழியில் உயிர் நீத்த தியாக தீபம் திலீபன் வழியில் சொல்லப்போகிறீர்களா? அதனைவிட வேறு என்ன செய்யப்போகிறீர்கள்? அல்லது புலிகளால் நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டத்தைவிட பெரிய போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கத் தயாரா? உலக சரித்திரத்திலே எவரும் தொட முடியாத, சிகரத்தைத் தொட்ட காலால்படை, கடற்படை, வான்படை எல்லாவற்றையும் வைத்துப் போராடிய புலிகளின் போராட்டத்தை விடவா நீங்கள் போராடப் போகிறீர்கள். அதை மக்களிடம் சொல்லவும்.

அணுகுமுறை மாற்றம்

அப்படியானால் உங்களிடம் உள்ள மாற்று வழிகள் என்ன? எங்களின் அணுகுமுறையில் மாற்றம் இருக்க வேண்டுமா சொல்லுங்கள். வெற்றிபெற வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. நாங்கள் தற்போது அணுகுமுறையை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. ஏனென்றால் இந்த ஆட்சி முடியப் போகின்றது. நாங்கள் அணுகுமுறையை சற்று மாற்றுவோம்.

நாட்டுக்குள் ஒரு தீர்வைக் காண்பதற்கு நாட்டு மக்கள் அனைவரும் இணங்க வேண்டும். நாங்கள் ஒன்றும் நியாயமற்றதைக் கேட்கவில்லை என்பதை அவர்கள் உணரவேண்டும். அவர்கள் சந்தேகப்படும் விததத்தில் மாற்றுவழி பற்றிப் பேசுவோர் செயற்படுகின்றனர். அவர்கள் சந்தேகப்பட்டால் எமது இலக்கை அடைவது கடினம். அதற்காக பொய் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாங்கள் என்ன விதத்தில் பேசுகின்றோம், எப்படிப் பேசுகின்றோம் என்பதில்தான் அது தங்கியிருக்கின்றது.

சர்வதேச சமூகம் ஆதரவு

பேச்சுக்கான இந்த அணுகுமுறைகளைக் கையாளும்போது உடனே அவர் விலைபோய்விட்டார் எனச் சொல்கிறார்கள். இது இலகுவாகச் சொல்கின்ற வார்த்தை. எல்லா ஆயுதங்களும் இருந்தும் கூட பெறப்பட முடியாததை ஒரு ஆயுதமும் இல்லாமல் அவர்களுடன் முட்டி மோதிப் பெறமுடியுமா? மாற்று அணுகுமுறைகளை வைத்துள்ளார்கள் இதனைச் சொல்லவேண்டும்.

இப்போது சர்வதேச சமூகத்தின் ஆதரவு எமது பக்கம் உள்ளது. ஆயுதப் போராட்ட காலத்தில் புலிகளை அந்த நாடுகள் தடைசெய்திருந்தன. அவர்களின் மனதில் நாங்கள் பொறுப்பற்றவர்கள் என்ற எண்ணம் வரக்கூடாது.
சாதாரணமாக இலக்கை அடைய சமூகத்தில் பின்பற்ற வேண்டிய முறைகள் இருக்கின்றன. அவற்றை நாங்கள் பின்பற்றவேண்டும். இந்த நாட்டில் பெரும்பான்மை இனத்தின் எதிர்ப்பைச் சம்பாதித்து எமது இலக்கை நிறைவேற்ற முடியாது. ஆனால், சமரசமாகப் பேசி அதனைச் செய்ய முடியும். அந்தப் பக்குவம் எங்கள் மக்கள் மனதில் இருக்கவேண்டும். அது எமது மக்களிடம் இருக்கிறது. அதை இல்லாமல் செய்யும் பரப்புரையை அனுமதிக்க முடியாது. அந்தப் பொறுப்பற்ற பரப்புரையை முறியடிக்கவேண்டியது இளைஞர்களின் கைகளிலேயே இருக்கின்றது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *