அழுது புலம்பும் அனுஷா…!

இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் மிக முக்கிய தளபதிகளுள் ஒருவராக திகழ்ந்தவர்தான் அமரர். பெ. சந்திரசேகரன். இ.தொ.காவின் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றியவர். சலுகை அரசியலைவிட – உரிமை அரசியலுக்கு முன்னுரிமை வழங்கியவர்.


வடக்கில் இயங்கிய தமிழ் ஆயுதக்குழுக்களுடனும் நெருங்கிய தொடர்பைபேணிவந்தார். கொள்கை முரண்பாட்டால் இ.தொ.காவிலிருந்து வெளியேறி தனிகட்சி துவங்கி, தொண்டா படையணிக்கு அதிர்ச்சி வைத்தியமும் கொடுத்தார்.

 

 

அமரர். சந்திரசேகரனின் தனிவழிப்பயணத்தாலும், தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர்கள் ஓரணியில் திரண்டதாலும் குறுகிய காலத்துக்குள்ளேயே மலையகத்தில் வெற்றிநடைபோட்டது மலையக மக்கள் முன்னணி.

அக்கட்சியை அழிப்பதற்கு – ஒடுக்குவதற்கு எதிரிகளால் ஆயிரம் வியூகங்கள் அமைக்கப்பட்டாலும் அவற்றையெல்லாம் முறியடித்து கட்சியை முன்நோக்கி அழைத்துச்சென்றார் சந்திரசேகரன். எனினும், அவரின் மறைவின் பின்னர் கட்சியானது பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

அமரர். சந்திரசேகரனின் பாரியாரான சாந்தினி சந்திரசேகரனிடம் தலைமைப்பதவி கையளிக்கப்பட்டாலும் ‘மாற்றம்’ எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தற்போதைய கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணனிடம் தலைமைப்பதவி ஒப்படைக்கப்பட்டது.

இதனால் சினம்கொண்ட சாந்தினி, கட்சியை விட்டு வெளியேறினார். ராதாமீதும் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்தார். நீண்டநாட்கள் இழுபறிக்கு பின்னர் மனம்மாறி, தனது மகளின் கன்னி அரசியல் பயணத்தை – கணவர் ஆரம்பித்த கட்சியூடாகவே ஆசிவழங்கி ஆரம்பித்துவைத்தார் சாந்தினி.

அனுஷா சந்திரசேகரனின் வருகையால் மலையக மக்கள் முன்னணி எழுச்சிபெறும், சாதனைபடைக்கும் என்றெல்லாம் கட்சிதொண்டர்களால் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரின் அரசியல் ஓட்டமும் ஆமைவேகத்திலேயே நகர்கின்றது.

தனது தந்தை ஆரம்பித்த கட்சியில் தனக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை, திட்டமிட்டஅடிப்படையில் ஓரங்கட்டப்படுகின்றேன் என தனக்கு நெருக்கமானவர்களிடம் அண்மையில் குமுறி அழுதாராம் அனுஷா சந்திரசேகரன்.

மாகாணசபைத்தேர்தல் நெருங்குவதால், நம்பிக்கையை தளரவிடவேண்டாமென சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் அனுஷாவுக்கு ஆலோசனை வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாகாணசபைத் தேர்தலில் வெட்டுவிழும் பட்சத்தில், அதிரடியான முடிவொன்றை அனுஷா எடுப்பாரென நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *