ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி புதிய முன்மொழிவு!

“படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட போருக்குப் பின்னர் நிலவுகின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய புதிய யோசனையை ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரில் முன்வைக்கவுள்ளேன். அதன் பின்னர் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கையின் பிரேரணையாக அது கொண்டுவரப்படும்.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“ஐக்கிய நாடுகள் சபையின் வருடந்த பொதுச் சபைக் கூட்டத் தொடரில் இம்மாதம் 25ஆம் திகதி இலங்கை தொடர்பில் புதிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவுள்ளேன்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு முன்வைத்துள்ள பிரேரணைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளல், நாட்டின் சுயாதீன தன்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கும் முப்படையினரின் கௌரவத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுதல் ஆகியன தொடர்பான விடயங்கள் அந்த முன்மொழிவில் உள்ளடக்கப்படும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் எமது பாதுகாப்பு படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களைப் போன்றே கடந்த யுத்த காலத்தில் இருதரப்பினரிடையேயும் இடம்பெற்றதாகக் கூறப்படும் சில சம்பவங்கள் தொடர்பில் இன்னும் தீர்க்கப்படாதுள்ள பல பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்த்துக்கொள்வதற்கு அதனூடாக வாய்ப்பு ஏற்படும்.

இந்த முன்மொழிவுகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரிடமும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரிடமும் எழுத்து மூலமாக சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளேன். எதிர்வரும் மார்ச்மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இது பிரேரணையாக முன்வைக்கப்படும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *