வீடெறிந்த விடயம் இனவாத விதை அல்ல! ஊதிப்பெருக்க வைத்தது சில ஊடகங்களே!! – சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் காட்டம்

“இஸ்மாயில்புர வீடெரிப்புச் சம்பவத்திற்கு தனிப்பட்ட தகராறே காரணமாகும். இதனை ‘மதம் மாறாமைக்காக வீட்டை எரித்தது’ என்று கூறியமை பச்சைப்பொய். இதனை ஒரு சில ஊடகங்களே ஊதிக்கெடுத்தன.”

– இவ்வாறு சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வி.ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே உப தவிசாளர் வி.ஜெயச்சந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சம்மாந்துறைப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் எ.எம்.எம். நௌசாட் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. அக்கூட்டத்தில் இஸ்மாயில்புர சம்பவம் தொடர்பாக எமது சபை ஊடக மாநாடொன்றை நடத்தி மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் அமர்வின் பின்னர் இந்த ஊடக மாநாடு பகல் நடைபெறுகின்றது.

சம்மாந்துறைப் பிரதேசபைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரத்தில் வீடும் ஓட்டோவும் எரிக்கப்பட்டமை உண்மைதான். ஆனால், அது பலவந்தமான மத மாற்றத்திற்காக இடம்பெற்றதல்ல. நான்அந்த வளத்தாப்பிட்டியைச் சேர்ந்தவன்தான். உபதவிசாளராக இருக்கின்றேன். அங்கு நாம் சென்று பூரணமாக விசாரித்தபோது உண்மை வெளிவந்தது.

அங்கு யாரும் அவரையோ அவரது குடும்பத்தையோ மதம் மாறச் சொல்லவில்லை. அவருக்குத் தேவை புதிய ஓட்டோ. அதற்காகவே இந்த நாடகம். இரு இனங்களையும் மூட்டி விடுகின்ற நாடகம் அரங்கேறியிருக்கின்றது. அதற்கு ஒரு சில ஊடகங்கள் குறிப்பாக வெளிநாட்டு ஊடகங்கள் தீனிபோட்டுள்ளன. இந்தச் சம்பவத்தை இனவாதமாக்கி ஊதிப் பெருப்பித்துள்ளன.

ஆனால், இஸ்மாயில் புரத்தில் இன்றும் தமிழ் – முஸ்லிம் மக்கள் உறவாகவே உள்ளனர். எனவே, இந்தச் சம்பவத்திற்காக அந்த நபர் சொன்ன மதமாற்றம் என்பது வெறும் பொய்.

நான் அவரிடம் நேற்று விசாரித்தேன். “நீர் ஏன் இவ்வாறு பொய் சொன்னீர்? யார் மதம் மாறச் சொன்னது?” என்று கேட்டபோது, “எனக்கு ஜீவாதாரத்துக்கான புதிய ஓட்டோவைப் பெற்றுத்தந்தால் நான் சொன்னதை வாபஸ் வாங்குவேன்” என்றார். எனவே, இது முழுமுழுக்க உண்மைக்குப் புறம்பான செய்தி” – என்றார்.

இந்த ஊடக மாநாட்டில் சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்களான என்.கோவிந்தசாமி, அ.அச்சுமொகமட், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஐ.எம்.முஸ்தபா யுசுப்லெவ்வை, ஏ.சி.எம். சஹீல் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *