பெண் அதிபரின் முறைப்பாடு போலியானதாம்! – ஊவா முதல்வருக்கு வெள்ளையடிப்பு செய்து வெளியானது ஆளுநரின் அறிக்கை

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர், ஊவா மாகாண முதல்வரான சாமர சம்பத் தஸநாயக்கவால் அச்சுறுத்தப்பட்டு – மண்டியிட வைக்கப்பட்டார் என முன்வைக்கப்பட்ட முறைப்பாடு போலியானது என மாகாண ஆளுநரின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஆசிரியரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்ததுபோல் எதுவுமே நடக்கவில்லை என்றும், ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கும் விசாரணையின்போது ஆசிரியரால் வழங்கப்பட்ட வாக்குமூலத்துக்கும் இடையே பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர்.பவானியை, ஊவா மாகாண முதல்வர் முழங்காலிட வைத்தார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பெப்ரவரி மாதம் விசாரணைகள் ஆரம்பமாகின.

ஊவா மாகாண பிரதி செயலாளரும் விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இக்குழுவின் விசாரணை அறிக்கையே தற்போது வெளியாகியுள்ளது.

அதேவேளை, ஊவா மாகாண முதலமைச்சர் உட்பட மேலும் சிலருக்கு எதிராக, பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர்.பவானி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மாணவியொருவரைப் பாடசாலையில் அனுமதிப்பதற்காக, முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவிடமிருந்து வந்த கடிதத்தை நிராகரித்ததால், முதலமைச்சர் தன்னைத் தனது உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு அழைப்பித்து தன்னைத் திட்டி அச்சுறுத்தினார் என்றுஅதிபர் தனது அடிப்படை மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மேற்படி சம்பவமானது இலங்கை அரசியல் களத்தைப் பரபரப்படையச் செய்தது. கடும் எதிர்ப்புகள் வலுத்ததால் கல்வி அமைச்சுப் பதவியை துறக்கவேண்டிய நிலை முதல்வருக்கு ஏற்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *