எல்லை மீறல் தொடர்ந்தால் தொல்லியல் திணைக்களத்தை முடக்கியே தீருவோம்! – வடக்கு மாகாண சபை எச்சரிக்கை

“தொல்லியல் திணைக்களத்தின் தலைமை அதிகாரியாகப் பெளத்த பிக்கு ஒருவர் உள்ள நிலையில் அதன் அண்மைக்காலச் செயற்பாடுகள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தொல்லியல் திணைக்களத்தை முற்றுகையிட்டுத் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் நிச்சயம் உருவாகும்.”

– இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவது தொடர்பாகவும், தொல்லியல் திணைக்களம் பெளத்த விகாரைகளை அமைக்க முயற்சிப்பது, புத்தர் சிலைகளை வைக்க முயற்சிப்பது குறித்தும் விசேட கவனயீர்ப்புக் கருத்து ஒன்றை முல்லைத்தீவு மாவட்ட சபை உறுப்பினர் து.ரவிகரன் சபையில் நேற்று முன்வைத்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவைத் தலைவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தொல்லியல் திணைக்களத்தின் அண்மைக்காலச் செயற்பாடுகள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன. தொல்லியல் திணைக்களத்தின் தலைமை அதிகாரியாக உள்ளவர் ஒரு பெளத்த பிக்கு என நான் அறிந்திருக்கின்றேன்.

தலைமைப் பொறுப்பில் சிவில் அதிகாரி ஒருவர் இருக்க வேண்டிய நிலையில் பெளத்த பிக்கு ஒருவர் இருப்பாரேயானால் அங்கு பக்கச்சார்பு இருப்பதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

இதேபோல் வனஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாடுகளும் எல்லை மீறிச் சென்று கொண்டிருப்பதை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.

உறுப்பினர் து.ரவிகரன் கூறிய கருத்துக்களையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு இந்த விடயத்தைக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களும் இந்த விடயத்தில் தீர்க்கமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும்.

தொடர்ச்சியாக நாங்கள் இவ்வாறான அடாவடிகளைப் பார்த்துக் கொண்டிருக்கவோ, சகித்துக் கொள்ளவோ இயலாது.

இதே நிலை தொடருமானால் தொல்லியல் திணைக்களத்தை முற்றுகையிட்டு வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தொடர் போராட்டங்களை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.

இவ்வாறான எச்சரிக்கையை மாகாண சபையில் முன்னெப்போதும் நான் கூறியதில்லை. ஆனால், இப்போது கூறவேண்டிய தேவை எழுந்துள்ளது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *