பாசையூர் கடற்கரை முன்றலில் மாவீரர் நினைவேந்தல் இன்று! – யாழ். மாநகர முதல்வர் அழைப்பு

தமிழ் இனத்தின் விடுதலைக்காக, தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் ‘மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு’ கடந்த காலங்களில் நடைபெற்றது போன்று இம்முறையும் பாசையூர் கடற்கரை முன்றலில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாண மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“தமது இன்னுயிர்களை நாம் கனவு கண்ட தமிழ் தேசியத்துக்காக ஆகுதியாக்கிய எம் மான மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று மாலை 6.00 மணியளவில் பாசையூர் கடற்கரை முன்றலில் வழமை போன்று இடம்பெறும்.

எனவே, மாவீரர்களை எம் தேசத்திற்களித்த மாவீரர் குடும்பங்கள் மற்றும் மாவீரர்களது உறவுகளையும், எமது மண்ணுக்காகப் போராடிய வீர மறவர்களையும் இந்த நிகழ்வில் தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசனங்களில் மாலை 5.00 மணிக்கு வருகை தந்து அமர்ந்து கொண்டு நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளுமாறும், இவர்களுடன் தமிழ்த் தேசியத்தின் பற்றாளர்களையும், தமிழ் பேசும் உறவுகளையும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.

எமது தியாகப் போராட்டத்தில் எம் விடுதலைக்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வில் ஒவ்வொரு தமிழ் பேசும் உணர்வாளனும் தவறாது கலந்து கொண்டு நினைவு கூர்வதுடன், மாவீரர்களை எமக்களித்த குடும்பத்தின் நல் வாழ்வுக்காகவும் பிரார்த்திப்போமாக!”- என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *