மீளவும் மஹிந்த வருவதே விக்கிக்கும் கஜேந்திரகுமாருக்கும் விருப்பம்! – சயந்தன் குற்றச்சாட்டு

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீளவும் பதவிக்கு வர வேண்டுமென வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் விரும்புகின்றனர்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் தெரிவித்தார்.

அதற்காகவே இன்றைய அரசியல் நெருக்கடியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலை வகிக்க வேண்டும் அவர்கள் கோருகின்றனர் எனவும் சயந்தன் குறிப்பிட்டார்.

சமகாலத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியில், கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

“எம்மைப் பொறுத்தவரையில், ஜனாதிபதியின் செயற்பாடு, அப்பட்டமான அரசமைப்புச் சட்ட மீறலாகும். அந்தச் செயலுக்காகத்தான் நாங்கள் எதிர்வினை ஆற்றுகின்றோம்.

ஜனாதிபதியின் இந்தச் செயலுக்காக நாங்கள் ஆற்றுகின்ற எதிர்வினை, ஏதாவதொரு விளைவில் முடிவடையலாம். அந்த விளைவு சில சமயங்களில் மஹிந்த ராஜபக்‌ஷவையோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவையோ பிரதமர் பதவியில் அமர்த்துவதில் முடிவடையலாம்.

மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் பதவியில் அமர வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் விரும்புகின்றார்கள். இதற்காக இவ்விருவரும் எங்களை விமர்சித்து வருகின்றனர்.

கடந்த காலங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது விமர்சனங்களை முன்வைப்பதில் பிரதானமாக முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இருந்து வருகின்றனர். அவர்கள் கூட்டமைப்பைக் குற்றஞ்சாட்டி, எங்களைப் புனிதர்களாகக் காட்டிக்கொள்வதற்குப் பிரசாரம் செய்ய முனைகின்றனர்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *