4,000 ஆண்டுகள் முன்பே புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய முயன்ற எகிப்தியர்கள்

விஞ்ஞானிகள் குழுவால் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மண்டை ஓடுகள், மருத்துவத்தின் வரலாற்றைப் பற்றிய நம்முடைய புரிதலைப் புரட்டிப் போடுகிறது.

பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருக்கும் டக்வொர்த் சேகரிப்பில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்தியர்களின் இரண்டு மண்டை ஓடுகள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த மண்டை ஓடுகளில் புற்றுநோய்க் கட்டிகளால் ஏற்படும் புண்கள் இருந்ததற்கான அடையாளங்கள் இருந்தன.

சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எகிப்தியர்களின் மண்டை ஓடுகள் இவை என்று கூறும் விஞ்ஞானிகள், அதில் ஒரு மண்டை ஓட்டில் புற்றுநோய்க் கட்டியை அகற்றுவதற்கான சுவடுகள் இருப்பதாகக் கூறுகின்றனர். அதாவது அந்த மண்டை ஓட்டுக்குச் சொந்தமான நபருக்கு புற்றுநோய்க் கட்டி இருந்திருக்கலாம்.

அதை அகற்றும் நோக்கத்துடன் அறுவை சிகிச்சை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் அல்லது அந்த நபருக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது புற்றுநோய்க் கட்டியின் நிலையைப் புரிந்துகொள்வதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்பெயினில் உள்ள சாண்டியாகோ டி கம்போஸ்டெலா பல்கலைக்கழகத்தின் பழங்கால நோயியல் நிபுணரும், ஃபிரான்டியர்ஸ் இதழில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வின் முதன்மை ஆசிரியருமான எட்கார்ட் கமரோஸ், “எகிப்தியர்கள் நோயைப் புரிந்து கொள்ள முயற்சி செய்ததற்கான சான்றுகள் இருப்பது புதுமையான தகவல்” என்றார்.

நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். 

“பண்டைய எகிப்தியர்களின் வாழ்வியலில், `அறுவை சிகிச்சை’ என்னும் மருத்துவ செயல்முறையைச் செய்திருக்கிறார்கள் என்பதை நினைக்கையில் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இது பண்டைய எகிப்தின் மிகவும் மேம்பட்ட மற்றும் அதிநவீன மருத்துவ முறையாக இருந்திருக்கும்” என்று பிபிசியின் நியூஸ் ஹவர் நிகழ்ச்சியில் கேமரோஸ் கூறினார்.

“எடுத்துக்காட்டாக, நம்மிடம் `எட்வின் ஸ்மித் பாப்பிரஸ்’ என்னும் பண்டைய எகிப்திய மருத்துவ நூல் உள்ளது, இது சுமார் 3,600 ஆண்டுகளுக்கு முந்தையது. அதில் அவர்கள் வெவ்வேறு உடல் பிரச்னைகள் சம்பந்தமான 48 நிகழ்வுகளை விவரிக்கிறார்கள். மேலும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்தப் பிரச்னைகளுக்கான சிகிச்சை என்ன என்பதை அவர்கள் கூற முயல்கிறார்கள்.”

“அவர்கள் மேம்பட்ட மருத்துவ அறிவைக் கொண்டிருந்தாலும், இன்று நாம் புற்றுநோய் என்று குறிப்பிடும் நோய், அவர்களின் மருத்துவ அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டது. இருப்பினும் அவர்கள் புற்றுநோய்க் கட்டிகளை அடையாளம் கண்டுள்ளனர்” என்று அவர் விளக்கினார்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அந்த மண்டை ஓடு 30 முதல் 35 வயதுடைய ஒருவருக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள், பத்திரிகையாளர் சங்க செய்தி நிறுவனத்திற்கு விளக்கினர்.

அந்த மண்டை ஓட்டில் மேலும் 30 சிறிய கட்டிகள் இருந்த தடயத்தையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர், இது புற்றுநோய்ப் பரவல் இருந்ததைக் காட்டுகிறது.

  • மற்றொரு அரிய மண்டை ஓடு
எகிப்தியர்கள் புற்றுநோயை எவ்வாறு அறுவை சிகிச்சை செய்தனர் என்பதை வெளிப்படுத்தும் 4,000 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு

பட மூலாதாரம்,FRONTIER/TATIANA TONDINI, ALBERT ISIDRO, EDGAR CAMARÓS

படக்குறிப்பு,விஞ்ஞானிகளுக்கு, எகிப்தியர்கள் புற்றுநோயைப் புரிந்துகொள்ள முயன்றனர் என்பதைக் காட்டும் தரவு இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

டக்வொர்த் சேகரிப்பில், விஞ்ஞானிகள் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு ஒன்றையும் கண்டுபிடித்தனர், இது 50 வயது பெண்ணுக்குச் சொந்தமானது என்கின்றனர்.

இந்த மண்டை ஓட்டிலும் புற்றுநோயால் ஏற்பட்ட வடுக்கள் இருந்தன. புற்றுநோய்ப் பரவலால் மண்டை ஓட்டின் எலும்புப் பகுதிகள் அழிக்கப்பட்டிருந்தன. ஆனால் அதே நேரத்தில் அந்த நபருக்கு ஒரு துளையிடப்பட்டதற்கான காயம் இருந்ததும் தெரிகிறது.

காமரோஸின் கூற்றுப்படி, இந்த உண்மை அசாதாரணமானது, ஏனெனில் பொதுவாக வன்முறை நிகழ்வுகள் தொடர்பான காயங்கள் ஆண்களின் புதைபடிவ எச்சங்களில் அடிக்கடி காணப்படுகின்றன.

ஆனால், இந்த மண்டை ஒட்டில் மைக்ரோ கம்ப்யூட்டட் டோமோகிராஃபி மூலம் மண்டை ஓடு பகுப்பாய்வு செய்யப்பட்டது. அப்போது விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, புற்றுநோயின் அறிகுறிகள் மிகவும் தெளிவாக இருந்தது.

“மண்டை ஓட்டு எலும்புகளில் உள்ள தழும்புகளின் குணாதிசயங்களால் இது புற்றுநோய் என்பதை எங்களால் உறுதி செய்ய முடிந்தது, அந்த புற்றுநோய் முக்கியமாக எலும்புகளின் உருவாக்கம் மற்றும் அழிவுடன் தொடர்புடையவை” என்று ஸ்பானிஷ் விஞ்ஞானி கூறினார்.

  • பழங்கால நோய் அறிகுறி
எகிப்தியர்கள் புற்றுநோயை எவ்வாறு அறுவை சிகிச்சை செய்தனர் என்பதை வெளிப்படுத்தும் 4,000 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு

பட மூலாதாரம்,FRONTIER/TATIANA TONDINI, ALBERT ISIDRO, EDGAR CAMARÓS

படக்குறிப்பு,நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓட்டில் உள்ள கட்டி

புற்றுநோய்க் கட்டிகள் என்பது தற்போது நவீன காலகட்டத்துடன் தொடர்புடைய நோய் என்று கருதப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு, உணவு மற்றும் மரபியல் தொடர்பானவை என்றும் நம்பப்படுகிறது.

இருப்பினும், புற்றுநோய் என்பது பழங்காலத்தில் இருந்தே இருக்கும் ஒரு நோய் என்று இந்த ஆய்வு காட்டுகிறது.

“புற்றுநோய் என்னும் நோய் ஆரம்பக் காலகட்டத்ட்கில் இருந்தே நம்முடன் பல வடிவங்களில் இருந்து வருகிறது. டைனோசர்கள்கூட புற்றுநோயால் பாதிக்கப்பட்டன” என்று கேமரோஸ் கூறினார்.

நமது முன்னோர்கள் இந்த நோயை எப்படி அணுகினார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இன்னும் அதிக ஆராய்ச்சிகள் தேவை என்று விஞ்ஞானி கேமரோஸ் தெளிவுபடுத்தினார்.

“மனித வரலாற்றின் தொடக்கத்தில் இருந்து புற்றுநோய் ஏற்பட்ட தடயங்களைக் கண்டறிவதே என் குறிக்கோள்” என்று அவர் பிரஸ் அசோசியேஷன் நிறுவனத்திடம் கூறினார்.

 பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *