‘இலங்கையின் சட்ட வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்’

இலங்கையின் சட்ட வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையில், இலங்கையில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்காக அவுஸ்திரேலியாவிலுள்ள பெடரல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட திருமணத்தை இரத்துச் செய்யும் ஆணையின் செல்லுபடியை இலங்கை நீதித்துறை அங்கீகரித்துள்ளது.

அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை பெற்றுள்ள தம்பதியரின் திருமணத்தை முறியடிக்கும் உத்தரவை கொழும்பு மேலதிக மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்திம எதிரிமான்ன பிறப்பித்துள்ளார்.

மற்ற நாடுகளில் உள்ள தகுதிவாய்ந்த நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட விவாகரத்து ஆணைகளை அங்கீகரித்து நடைமுறைப்படுத்தும் ரிட் விண்ணப்பத்தில், சமீபத்தில் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என நீதிபதி குறிப்பிட்டார்.

சமீபத்திய தீர்ப்பில் (CA/WRIT/266/2021), இலங்கையில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் வேறொரு நாட்டில் தகுதிவாய்ந்த நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட திருமண இரத்தை நிரூபிக்கும் செல்லுபடியாகும் ஆவணத்தை ஏற்றுக்கொள்வதை தடை செய்யவில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எவ்வாறாயினும், இந்த ஏற்றுக்கொள்ளல் நீதிமன்றத்தால் நிறுவப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் சான்றுகள் தொடர்பான சட்டத்தின் விதிகளுக்கு இணங்க வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

இதன்படி, அந்தந்த நாட்டின் சட்டம், அயல்நாட்டில் நிச்சயிக்கப்படும் திருமணங்களை இரத்துச் செய்ய அந்நாட்டு நீதிமன்றங்களுக்கு அதிகார வரம்பை வழங்கியுள்ளதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என அதன் முதல் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, இலங்கையில் திருமணம் செய்து கொண்ட இரு தரப்பினரும் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் போது அந்தந்த நாட்டில் நியாயமான காலம் தங்கியிருப்பது அவசியம்.

மூன்றாவதாக, கணவன்-மனைவி இருவரும் வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்க வேண்டும் மற்றும் திருமண நடவடிக்கைகள் தொடர்பாக அந்த நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்க வேண்டும்.

இதுவரை இலங்கையில் திருமணம் செய்துகொண்டு வெளிநாடு சென்ற இலங்கையர்கள் வெளிநாட்டு நீதிமன்றங்களில் பெற்ற விவாகரத்துகள் உள்நாட்டு நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *