எய்ட்ஸ் நோயை குணப்படுத்த வழி கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

மரபணு எடிட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் இருந்து எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி வைரஸை வெற்றிகரமாக அகற்றியிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இது ‘க்ரிஸ்ப்ர்’ (Crispr) என்றழைக்கப்படும் மரபணு எடிட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் கூறினர். இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த இரண்டு பெண் விஞ்ஞானிகளுக்கு 2020ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இத்தொழில்நுட்பம் மூலக்கூறுகளை வெட்டும் ஒரு கத்தரிக்கோலைப் போல வேலை செய்கிறது. அது டி.என்.ஏ.வை வெட்டுகிறது. எனவே இதைப் பயன்படுத்தி உயிரணுவின் ‘மோசமான’ பகுதிகளை வெட்டி அகற்றலாம் அல்லது செயலிழக்கச் செய்யலாம்.

இதன்மூலம், உடலில் இருந்து எச்.ஐ.வி வைரஸை முழுவதுமாக அகற்றுவதே குறிக்கோள். ஆனால், அதை அடைவதற்கு இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.

  • எச்.ஐ.வி, எய்ட்ஸ், மருத்துவ ஆய்வு, சிகிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

தற்போது உள்ள எச்.ஐ.வி மருந்துகள் வைரஸை தடுத்து நிறுத்த மட்டுமே செய்கின்றன. அவற்றால் அதை முற்றிலுமாக அகற்ற முடியாது.

தற்போதைய ஆராய்ச்சியை நடத்திய ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக குழு, இந்த வாரம் ஒரு மருத்துவ மாநாட்டில் அவர்கள் இதுவரை கண்டறிந்த முதல்கட்ட கண்டுபிடிப்புகளின் சுருக்கத்தை வெளியிட்டு, இது இந்தத் தொழில்நுட்பத்தின் சாத்தியத்திற்கான ஆதாரம் மட்டுமே என்று கூறினர். இது உடனடியாக எச்.ஐ.வி-க்கான சிகிச்சையாக மாறாது என்றும் கூறினர்.

நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஸ்டெம்-செல் மற்றும் மரபணு சிகிச்சை தொழில்நுட்பங்களின் இணை பேராசிரியரான டாக்டர் ஜேம்ஸ் டிக்சன் இந்தக் கருத்தோடு உடன்படுகிறார். இதற்கு இன்னும் ஆய்வுகள் தேவை என்று அவர் கூறுகிறார்.

“உயிரணு அளவில் கிடைத்திருக்கும் இந்த முடிவுகள், உடல் முழுவதும் நடக்கக்கூடும் என்பதை நிரூபிக்க இன்னும் அதிக ஆராய்ச்சி தேவைப்படும்,” என்று அவர் கூறினார்.

‘எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பலனளிக்கும் முன் இன்னும் இதற்குப் பலகட்ட மேம்பாடுகள் தேவைப்படுவதாகவும்’ அவர் தெரிவித்தார்.

  • எச்.ஐ.வி, எய்ட்ஸ், மருத்துவ ஆய்வு, சிகிச்சை
எச்.ஐ.வி நுண்கிருமி உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பின் செல்களைத் தாக்குகிறது. அதன்பின், தானாகவே தனது நகல்களை உருவாக்குகிறது.

மற்ற ஆராய்ச்சிக் குழுக்களும் க்ரிஸ்ப்ர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எச்.ஐ.வி நுண்கிருமியை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

எக்சிஷன் பயோதெரபியூடிக்ஸ் என்ற நிறுவனம், எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களுக்கு இந்தச் சோதனை செய்யப்பட்டதாகவும், 48 வாரங்களுக்குப் பிறகும், அவர்களுக்குத் தீவிரமான பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும் கூறுகிறது.

ஆனால், லண்டனில் உள்ள பிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிடியூட்டில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி நிபுணர் மருத்துவர் ஜோனாதன் ஸ்டோய், எச்.ஐ.வி-யை உடலில் உள்ள அனைத்து செல்களில் இருந்தும் அகற்றுவது ‘மிகவும் சவாலானது’ என்றார்.

“இந்தச் சிகிச்சையின் பின்விளைவுகள், நீண்ட கால பக்கவிளைவுகள், ஆகியவை பற்றிய கவலைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

“க்ரிஸ்ப்ர் அடிப்படையிலான சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அது பயன்பாட்டுக்கு வர இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும் என்று தோன்றுகிறது,” என்கிறார் அவர்.

எச்.ஐ.வி நுண்கிருமி உடலில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பின் செல்களை தாக்குகிறது. அந்த செல்களுக்குள் புகுந்த பின்னர், தானாகவே தனது நகல்களை உருவாக்கிக் கொள்கிறது.

  • எச்.ஐ.வி, எய்ட்ஸ், மருத்துவ ஆய்வு, சிகிச்சை
எச்.ஐ.வி உள்ள பெரும்பாலானவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை (antiretroviral therapy) தேவைப்படுகிறது.

ஆற்றல்மிக்க சிகிச்சை அளித்தால்கூட, சில எய்ட்ஸ் நோயாளிகளின் உடலில், எச்.ஐ.வி நுண்கிருமி செயலற்ற நிலையில் தங்கியிருக்கும். அவர்கள் உடலில் புதிய வைரஸ் அணுக்கள் உற்பத்தி செய்யப்படாவிட்டாலும்கூட, எச்.ஐ.வி நுண்கிருமியின் மரபணுக் கூறுகளைக் கொண்டிருக்கிறார்கள்.

எச்.ஐ.வி உள்ள பெரும்பாலானவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை (antiretroviral therapy) தேவைப்படுகிறது. அவர்கள் இந்த மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தினால், செயலற்ற வைரஸ் மீண்டும் ஆற்றல் பெற்று பிரச்னைகளை ஏற்படுத்தும்.

அரிதான சம்பவங்களில் சிலர் எச்.ஐ.வி பாதிப்பிலிருந்து ‘குணப்படுத்தப்பட்டிருக்கின்றர்’. புற்றுநோய்க்கான சிகிச்சை எச்.ஐ.வி பாதித்த அவர்களது சில செல்களை அழித்தது. ஆனால் இது எச்.ஐ.வி.க்கான சிகிச்சையாகப் பரிந்துரைக்கப்படாது.

 பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *