வயாகரா பிறந்த கதை!

புகழ்பெற்ற கால்பந்து வீரர் பீலே அதற்கு விளம்பரம் செய்தார். போப் ஆண்டவர் அதை அங்கீகரித்தார்.

ஆனால், வேல்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் இருக்கும், தொழிற்சாலைகள் நிறைந்த மெர்தெர் டிட்வில் என்னும் சிற்றூர் மட்டும் இல்லையெனில், வயாகராவை பற்றி நாம் கேள்விபட்டிருக்கவே மாட்டோம்.

முன்பு ஒருமுறை அந்த ஊரில் உள்ள தொழிற்சாலைகள் சரிவைச் சந்தித்தன. அப்போது, அங்கிருந்த ஆண்களில் பலர், இரும்புத் தொழிற்சாலையில் செய்து வந்த வேலையை இழந்தனர். நெருக்கடியான சூழலில், பணம் வேண்டி, உள்ளூரிலிருந்த ஒரு மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்குத் தாமாகவெ சென்று, ஒரு ஆய்வில் சோதனை எலிகளாகப் பங்கெடுத்தனர்.

ஆனால், அப்போது தாம் பங்கெடுக்கும் மருத்துவ ஆய்வு உலகை எந்த அளவுக்கு பாதிக்கப் போகிறது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

அது நடந்து 30 ஆண்டுகள் கழித்துதான் அதில் பங்கெடுத்த சிலர், அந்த ஆய்வின் மூலம், விறைப்புக் குறைபாட்டினால் உலகெங்கிலும் பாதிக்கப்பட்ட பலகோடி ஆண்களுக்கு ஒரு தீர்வு கிடைத்தது என்பதை அறிந்தனர்.

  • ஆய்வு எப்படித் தொடங்கியது?

ஃபைஸர் (Pfizer) என்ற மருந்து நிறுவனம் 1990களின் துவக்கத்தில் சில்டெனாஃபில் யு.கே-92,480 (Sildenafil UK-92,480) என்ற மருந்தை பரிசோதித்துக் கொண்டிருந்தது. இதன் குறிக்கோள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சு வலி ஆகியவற்றுக்கான மருந்தைக் கண்டுபிடிப்பது.

இதற்காக அந்த நிறுவனம், மெர்தெர் டிட்வில் ஊரில் ஓர் ஆய்வகத்திடம் சோதனைப் பணிகளை ஒப்படைத்தது. அந்த ஊரின் இளம் ஆண்களை வைத்து சோதனை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.

அப்படி அந்த ஆய்வில் பங்கெடுத்தவர் இட்ரிஸ் ப்ரைஸ். அவர் 1992ஆம் ஆண்டு அதில் பங்கெடுத்தார். அப்போது அவருக்கு நிலையான வேலை இல்லை. இரும்புத் தொழிற்சாலை ஒன்று அவரை வேலையிலிருந்து நீக்கியிருந்தது.

“என்னிடம் பணம் இல்லாத போதெல்லாம், சிம்பெக் என்னும் அந்த் இடத்திற்குச் செல்வேன்,” என்கிறார் அவர்.

அங்கு அவர், எந்தச் சோதனைகளில் பங்கெடுத்தால் பணம் கிடைக்கும் என்று கேட்பார். “ஆனால், அந்த மருந்தைப் பற்றி எங்களுக்கு எதுவுமே சொல்லவில்லை. அது நெஞ்சு வலிக்கானது, சில பின்விளைவுகள் இருக்கும் என்று மட்டும் சொன்னர்கள்,” என்கிறார்.

“அதில் பங்கேற்ற பல இளம் ஆண்கள் என்ன நடக்கப் போகிறதோ என்ற பதற்றத்திலேயே இருந்தனர்,” என்கிறார்.

  • வயாகரா, பாலியல் ஆரோக்கியம், திருமணம்

தொடர்ந்து 10 நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும் 3 முறை சில்டெனாஃபில் யு.கே-92,480 என்ற அந்த மருந்தை உட்கொள்ள அந்த இளைஞர்களுக்குப் பணம் வழங்கப்பட்டது.

பிபிசியின் ஆவணப் படத்தில் பேசிய அவர், 1980களின் இறுதி, 1990களின் துவக்கத்தில் அவர்கள் தீவிரமான நிதிச் சிக்கலில் இருந்ததாகவும், எந்த வழியிலாவது கொஞ்சம் பணம் சம்பாதிக் வேண்டும் என முயன்றதாகவும் கூறுகிறார் அவர்.

தனது குடும்பத்திற்கு இந்தப் பணம் மிகவும் அவசியமாக இருந்தது என்கிறார் ப்ரைஸ். “அதை வைத்து கொஞ்சம் அதிகமாக உணவு வாங்கினோம். இரண்டு மூட்டை அடுப்புக் கரி வாங்கிய இடத்தில் ஐந்து மூட்டைகள் வாங்கினோம். பெரும் உழைப்பு எதுவுமின்றி கொஞ்சம் வருமானம் கிடைத்தது,” என்கிறார் அவர்.

இந்தச் சோதனைகள் முடிந்தபிறகு, அதன்மூலம் நடந்த பின்விளைவுகள், ஃபைஸர் நிறுவனத்திற்கு ஒரு புதிய யோசனையைத் தோற்றுவித்தது.

  • வயாகரா, பாலியல் ஆரோக்கியம், திருமணம்

ஃபைஸர் நிறுவனத்தின் அப்போதைய கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாட்டுத் துறை தலைவராக இருந்த மருத்துவர் பீட் எல்லிஸ் அதைப் பற்றிக் கூறுகையில், சோதனையில் பங்கெடுத்த ஆண்கள் ஒரு குறிப்பிட்ட பிரச்னையைப் பற்றிக் கூறத் துவங்கினர் என்கிறார்.

“சொல்வதற்குக் கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் எனக்கு அடிக்கடி விறைப்புத்தன்மை ஏற்படுகிறது. அதுவும் முன்பைவிட அதிகமாக விறைக்கிறது’ என்று அவர்கள் கூறினர்,” என்கிறார்.

இதைக் கேள்விப்பட்டதும், ஃபைஸர் நிறுவனம், விறைப்புத்தன்மை குறைபாட்டை ஆராய நிதி ஒதுக்கியது.

இங்கிலாந்தின் ப்ரிஸ்டல் நகரின் சௌத்மீட் மருத்துவமனையில், விறைப்புத்தன்மை குறைபாடுள்ள ஆண்களை வைத்து சோதனை நடத்தப்பட்டது. 1994ஆம் ஆண்டு ஸ்வான்சீ நகரில் சோதனை நடத்தப்பட்டது.

ஸ்வான்சீயில் இருந்த மாரிஸ்டன் மருத்துவமனை மிகப் பரவலான சோதனையை நடத்தியது. இது நீரிழிவு, இதய நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களை உள்ளடக்கியது. இவ்விரண்டு நோய்களாலும் விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படக்கூடும்.

அந்த ஆய்வின் தலைவராக இருந்தவர் சிறுநீரியல் மற்றும் இனப்பெருக்க உறுப்பியல் துறை ஆலோசகர் டேவிட் ப்ரைஸ். அவர், இந்தச் சோதனையில் பங்கெடுக்க, எதிர்பாலினத்தவர்மீது (பெண்கள்மீது) ஈர்ப்புள்ள, நிலையான உறவில் இருக்கும் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று ஃபைஸர் நிறுவனம் அறிவித்தது என்கிறார்.

“அவர்களெல்லாம், சாதாரண் ஆண்மக்கள். உடலுழைப்பு வேலை செய்பவர்கள். சோதனையின் ஒரு பகுதியாக அவர்களுக்கு பாலியல் இச்சையைத் தூண்டும் காணொளிக் காட்சிகள் காட்டப்பட்டன,” என்கிறார் அவர்.

சோதனையில் பங்கெடுத்த ஆண்களின் ஆணுறுப்பில் ஒரு சாதனம் பொருத்தப்பட்டது. அதன்மூலம் மருந்தின் தாக்கம் கண்காணிக்கப்பட்டது. அவர்கள் தொந்தரவு செய்யப்பட மாட்டார்கள் என மருத்துவர்கள் அவர்களுக்கு உறுதியளித்தார்கள்.

  • வயாகரா – அற்புதமா? ஆபத்தா?
வயாகரா, பாலியல் ஆரோக்கியம், திருமணம்

ஒரு புரட்சிகரமான மருந்தைக் கண்டறிந்துவிட்டதாக ஃபைஸர் உடனடியாக உணர்ந்தது.

சொல்லப்போனால், இந்தச் சோதனைகளின் முடிவுகள் எவ்வளவு சிறப்பாக இருந்தனவெனில், அதில் பங்கெடுத்த பல ஆண்கள், அவர்களிடம் இருந்த உபரி மாத்திரைகளை திருப்பிக் கொடுக்க மறுத்துவிட்டனர்.

காலம் தாழ்த்தாமல், ஃபைஸரின் விற்பனைப் பிரிவு இந்தப் புதிய மாத்திரையைப் பற்றிய செய்தியை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்று சிந்திக்கத் தொடங்கியது. அதேநேரம், நிபுணர்கள் குழு, இதை அற்புதமானதாகப் பார்ப்பார்களா அல்லது ஆபத்தானதாகப் பார்ப்பார்களா என்று கலந்தாலோசித்தது.

ஒரு பழமைவாத சமூகத்திற்கு ‘பாலியல் மருந்து’ எனப் புரிந்துகொள்ளப் படக்கூடிய ஒரு மாத்திரையை விற்பதிலுள்ள சிக்கல்களைப் பற்றிச் சிந்திக்கத் துவங்கினர். இதற்காக, சோதனையில் பங்கெடுத்த ஆண்களின் அனுபவங்களை வியாபார உத்தியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

வயாகரா, பாலியல் ஆரோக்கியம், திருமணம்
வயாகார மாத்திரை, பிரச்னைக்கு உள்ளாகியிருக்கும் திருமண உறவுகளைச் சீர்படுத்தும், அதன்மூலம் திருமண உறவும், குடும்ப அமைப்பும் காப்பாற்றப்படும் என்று கூறப்பட்டது.

விறைப்புக் குறைபாடு ஒருவரின் சுயமதிப்பை எந்தளவு பாதிக்கும், அவரது உறவுகளை எந்தளவு பாதிக்கும் என்பது பற்றி அவர்கள் சிந்தித்ததாகக் கூறுகிறார், ஃபைஸர் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் மூத்த மேலாளராக இருந்த ஜெனிஃபர் தோப்லர்.

“அது தங்கள் உறவை எந்தளவு பாதித்தது என்றும், அது அவர்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்றும் ஆண்கள் என்னிடம் கூறியபோது அது என்னை மிகவும் பாதித்தது,” என்கிறார் அவர்.

விறைப்புக் குறைபாட்டிற்கான தங்கள் மருந்து, பிரச்னைக்கு உள்ளாகியிருக்கும் திருமண உறவுகளைச் சீர்படுத்தும், அதன்மூலம் திருமண உறவும், குடும்ப அமைப்பும் காப்பாற்றப்படும் என்று கூறி, இதற்கு போப் ஆண்டவரின் ஆசியைப் பெற்றது ஃபைச்ஸர்.

கடந்த 1998ஆம் ஆண்டு வயாகரா என்று பெயரிடப்பட்ட இந்த மருந்து அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் விற்பனைக்கு வந்தது. இது வாய்வழியாக உட்கொள்ளப்பட அனுமதிக்கப்பட்ட முதல் விறைப்புக் குறைபட்டு மருந்து என்று மிகப்பெரும் அளவில் விளம்பரப்படுத்தப்பட்டது.

வரலாற்றிலேயே மிக விரைவாக விற்பனையான மருந்து இதுதான். 2008ஆம் ஆண்டின் விறபனை உச்சம் தொட்டது. 16,700 கோடி ரூபாய்.

  • 30 ஆண்டுகளுக்குப் பின் தெரிந்த உண்மை
வயாகரா, பாலியல் ஆரோக்கியம், திருமணம்
வயாகராவை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான மருத்துவர் டேவிட் ப்ரௌன்

ஆனால், தன்னைப் போல முதற்கட்ட சோதனைகளில் பங்கேற்ற சிலர் தெரிவித்த பின்விளைவுகள்தான் வயாகரா உருவாகக் காரணமாக இருந்தது என்பதை அறியாமல் இருந்தார், இட்ரிஸ் ப்ரைஸ். தனது ஊரான மெர்தெரின் பங்கைப் பற்றியும் அறியாமல் இருந்தார்.

இந்த ஆண்டுதான் சில ஆராய்ச்சியாளர்கள் அவரிடம் இதைப் பற்றிக் கூறினர்.

“இதைக் கேட்டபோது மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனேன்,” என்கிறார் இட்ரிஸ்.

“இன்று வயாகரா ஒரு மிகப்பெரிய விஷயம். அது மெர்தெர் டிட்வில்லில் பிறந்தது என்பதில் பெருமையாக இருக்கிறது,” என்றார்.

வயாகராவை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான மருத்துவர் டேவிட் ப்ரௌன், தெற்கு வேல்ஸ் பகுதியின் ஆண்கள் இல்லையெனில் வயாகரா இல்லை என்றார். “அவர்கள் வரலாறு படைத்தார்கள்,” என்றார்.

“அவர்கள் கொஞ்சம் பணம் சம்பாதிக்கும் நெருக்கடியில் இருந்தார்கள். ஆனால் அவர்கள் பல மக்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். அதற்காக அவர்கள் பெருமைப்பட வேண்டும்,” என்றார்.

  • விறைப்புக் குறைபாடு எவ்வளவு பெரிய பிரச்னை?

மருத்துவ ஆய்வுகள், 40 வயதில் இருந்து 60 வயதான ஆண்களில் பாதி பேருக்கு விறைப்புக் குறைபாடு எற்படக்கூடும் என்று கூறுகின்றன.

வேறு சில ஆய்வுகள், 2025ஆம் ஆண்டில், உலகம் முழுதுமுள்ள 32 கோடி ஆண்கள் இதனால் பாதிக்கப்படலாம் என்று கூறுகிறது. இதுவே 1995ஆம் ஆண்டில் 15 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *