இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட உஸ்பெகிஸ்தான் சிறுமிகளின் கொடூரமான கதை

தெற்கு டெல்லியின் பரபரப்பான சாலையில் உஸ்பெகிஸ்தான் கடை ஒன்றை கார் கடந்து செல்லும்போது, ​​தான் ஒருகாலத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செல்லும் சாலைகள் அஃப்ரோஸாவுக்கு நினைவுக்கு வருகின்றன.

உஸ்பெகிஸ்தானின் ஆன்டிஜனைச் சேர்ந்த அஃப்ரோஸா, ஜனவரி 2022-இல் டெல்லியை அடைந்தார். மனிதக் கடத்தல்காரர்கள் துபாய் – நேபாளம் வழியாக அவரை டெல்லிக்குக் கொண்டு வந்தனர்.

அங்கு அவர் வெவ்வேறு குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தப்பட்டார்.

டெல்லி காவல்துறை மற்றும் ‘எம்பவரிங் ஹியூமானிட்டி’ (Empowering Humanity) எனும் அரசு சாரா அமைப்பு ஆகியவற்றின் நடவடிக்கைகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 2022-இல் அவர் மீட்கப்பட்டார்.

அப்போதிலிருந்து அஃப்ரோஸா ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார். மேலும், உஸ்பெகிஸ்தானில் இருந்து தன்னை டெல்லிக்கு அழைத்து வந்த மனிதக் கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அஃப்ரோஸாவுக்கு வீடுகளின் எண்ணிக்கை நினைவில் இல்லை. ஆனால், தன் நினைவுகளை கசக்கி, பல தெருக்களைக் கடந்து, பலமுறை வழி தவறி, கடைசியாக நேபாளத்திலிருந்து செல்லும் சாலை அமைந்துள்ள டெல்லியின் நெப் சராய் பகுதியில் உள்ள அந்த உயரமான கட்டடத்தின் அருகே நின்றாள். அதுதான் அவர் முதன்முதலில் அடைத்து வைக்கப்பட்ட கட்டடம்.

  • மனிதக் கடத்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவருடைய கண்களில் கண்ணீர் கசிந்தது. வேகமாக மூச்சுவிட்டார். சில நிமிடங்களில் கண்களில் இருந்த ஈரம் கோபமாக மாறியது. படிக்கட்டுகளில் வேகமாக ஏறி, தான் சித்திரவதை செய்யப்பட்ட வீட்டின் கதவுக்கு அருகே நின்றார்.

“நான் இங்கு அழைத்து வரப்பட்டபோது, ​​ஏற்கனவே ஐந்து சிறுமிகள் இங்கு இருந்தனர். உஸ்பெகிஸ்தானில் இருந்து, முதலில் துபாய்க்கும், அங்கிருந்து நேபாளத்துக்கும், பின்னர் சாலை வழியாக டெல்லிக்கும் அழைத்துச் செல்லப்பட்டேன். நான் சோர்வாக இருந்தேன், இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்டேன்” என அஃப்ரோஸா கூறுகிறார்.

“என்னை ஷாப்பிங் அழைத்துச் சென்று, சிறிய ஆடைகளை பரிசாகக் கொடுத்தார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு, நான் பாலியல் தொழிலில் ஈடுபடும்படி வற்புறுத்தப்பட்டேன். அதற்கு மறுத்தபோது என்னை அடித்தனர்” என்கிறார்.

“டெல்லியை அடைந்த பிறகு, முதல் இரண்டு நாட்கள் மட்டுமே ஓய்வெடுத்தேன், அதன் பிறகு ஒருநாள் கூட நிம்மதியாக உட்கார அனுமதிக்கப்படவில்லை. சில சமயங்களில் அடுக்குமாடி குடியிருப்பிலும் சில சமயங்களில் ஹோட்டல்களிலும் என்னை அடைத்து வைத்தனர்” என அஃப்ரோஸா கூறுகிறார்.

ஒவ்வொரு ஆண்டும், வேலைக்காக எனக் கூறி, ஆள் கடத்தல்காரர்கள் மத்திய ஆசியாவில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்கு நூற்றுக்கணக்கான சிறுமிகளை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்துகின்றனர்.

பல சிறுமிகள் மருத்துவ விசா மற்றும் சுற்றுலா விசாக்களிலும் இங்கு அழைத்து வரப்படுகின்றனர்.

  • உஸ்பெகிஸ்தான் சிறுமிகள் ஆள்கடத்தல்
பாலியல் தொழில் செய்ய மறுத்ததால் தெஹ்மினா கடுமையாக தாக்கப்பட்டு வீடியோவும் எடுக்கப்பட்டது.

வேலை எனக்கூறி ஏமாற்றுதல்

நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின்படி, சமூக ஊடகங்கள் மூலம் அஃப்ரோஸா தொடர்பு கொள்ளப்பட்டு, அவருக்கு துபாயில் வேலைவாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அஃப்ரோஸாவின் நோய்வாய்ப்பட்ட தாயையும் குடும்பத்தின் மோசமான பொருளாதார நிலையையும் மனிதக் கடத்தல்காரர்கள் முன்னரே அறிந்திருந்தனர்.

​​“துபாய் வேலையை நான் ஏற்றுக்கொண்டேன். டெல்லியை அடையும் வரை இந்த வேலைக்காக நான் அழைத்து வரப்பட்டதாக எனக்குத் தெரியாது. சிறிதளவுகூட அதுகுறித்த உணர்வு இருந்திருந்தால், நான் வந்திருக்கவே மாட்டேன்” என்கிறார் அஃப்ரோஸா.

  • உஸ்பெகிஸ்தான் சிறுமிகள் கடத்தல்
அஃப்ரோஸா நேபாளத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு இந்த கட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டார்.

அஃப்ரோஸா போன்ற சுரண்டப்படும் சிறுமிகளின் ‘விநியோகம்’, சுரண்டுபவர்கள், இடைத்தரகர்கள் மற்றும் மனிதக் கடத்தல்காரர்களின் ஒழுங்கமைக்கப்பட்ட வலைப்பின்னல் மூலம் சட்ட விரோத பாலியல் தொழில் எளிதாக்கப்பட்டுள்ளது.

“சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தாலும், விசா முடிந்த பிறகும், அவர்கள் எப்படி காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் பார்வையில் இருந்து விலகி இருக்கிறார்கள் என்பது ஒரு பெரிய கேள்வி” என்று மனிதக் கடத்தலுக்கு எதிராக செயல்படும் ஹேமந்த் ஷர்மா கேள்வி எழுப்புகிறார்.

மத்திய ஆசியாவில் இருந்து கடத்தப்படும் சிறுமிகள் எதிர்கொள்ளும் ஒரு பெரிய சவால் என்னவென்றால், அவர்களுக்கு இந்தியாவில் உள்ளூர் மொழி தெரியாது அல்லது இங்கு யாரையும் அவர்களுக்குத் தெரியாது என்பதுதான்.

தங்களின் பாஸ்போர்ட் பறிக்கப்பட்டதாகவும், ‘சிறைக்கு அனுப்பிவிடுவோம்’ என தாங்கள் மிரட்டப்பட்டதாகவும் பிபிசியிடம் பேசிய மனிதக் கடத்தலுக்கு ஆளான சிறுமிகள் தெரிவித்தனர்.

அஃப்ரோஸாவை இந்தியாவுக்கு அழைத்து வந்ததாகக் கூறப்படும் மனிதக் கடத்தல்காரரான அசிஸா ஷேர், ஆகஸ்ட் 2022-இல் டெல்லி காவல்துறையின் நடவடிக்கைக்குப் பிறகு தலைமறைவானார். இவர் மேலும் பல பெயர்களால் அறியப்படுகிறார்.

நீண்ட தேடுதலுக்குப் பிறகு, துர்க்மெனிஸ்தானைச் சேர்ந்த அசிஸா ஷேர் மற்றும் ஆப்கானிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட அவரது கணவர் ஷெர்கெட் ஆப்கானை டெல்லி காவல்துறையினர் கோவாவில் கைது செய்தனர்.

இந்திய அடையாள அட்டைகள் மற்றும் பல பெயர்களில் அசிஸா வங்கி கணக்குகளை வைத்திருந்ததும் காவல்துறை விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.

  • உஸ்பெகிஸ்தான் சிறுமிகள் கடத்தல்
மனிதக் கடத்தல் வலையமைப்பை உடைக்கும் வரை காவல்துறை நடவடிக்கை தொடரும் என்று கிழக்கு டெல்லி துணை காவல் ஆணையர் அம்ரிதா குலிகோத் கூறுகிறார்.

அசிஸா பிடிபட்டது எப்படி?

கிழக்கு டெல்லி துணை காவல் ஆணையர் அம்ரிதா குலிகோத் கூறுகையில், “அசிஸா ஒரு அறிவிக்கப்பட்ட குற்றவாளி. டெல்லி காவல்துறையினர் அவரை பிடிக்க ஒரு வருடமாக முயன்றனர். தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் புலனாய்வு தகவல் மூலம் அவர் கோவாவில் இருப்பது குறித்து எங்கள் குழுவினருக்குத் தகவல் கிடைத்தது. டெல்லி காவல்துறையின் ‘ஆபரேஷன்’ மூலம் அவர் கைது செய்யப்பட்டார்” என்றார்.

இந்த ஆபரேஷனில் ஈடுபட்ட மயூர் விஹார் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் (SHO) பிரமோத் குமார் மற்றும் அவரது குழுவினர் 200-க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களைக் கண்காணித்து, இறுதியாக அசிஸா ஷேரை அடைந்தனர். இந்த மனிதக் கடத்தல்காரர்களை பிடிக்க, காவல்துறையினர் புலனாய்வு அமைப்புகளின் உதவியையும் நாட வேண்டியிருந்தது.

அசிஸாவின் பலிகடா அஃப்ரோஸா மட்டும் அல்ல. அவரைப் போலவே இன்னும் பல பெண்கள் அசிஸாவின் பிடியில் இருந்து மீட்கப்பட்டனர்.

அதில் தெஹ்மினாவும் ஒருவர். 2020-ம் ஆண்டு தெஹ்மினாவும் வேலை ஆசையில் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால் இங்கு வந்த பிறகு அவரும் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டார்.

  • பாலியல் தொழில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தாக்கப்பட்ட சிறுமிகள்

தெஹ்மினாவின் காணொளியும் டெல்லி காவல்துறை விசாரணையின் ஒரு பகுதியாகும். இந்த காணொளியில் தெஹ்மினா மோசமாக தாக்கப்படுகிறார். இந்த காணொளி ஆகஸ்ட் 2022-க்கு முந்தையது என காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த காணொளியை உறுதிப்படுத்தும் தெஹ்மினா, “நான் அசிஸாவின் பிடியில் மோசமாக சிக்கிக்கொண்டேன். ஒருமுறை என்னிடம் வந்த ஒரு நல்ல வாடிக்கையாளரிடம் என்னை இந்த பிடியில் இருந்து விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டேன்” என்கிறார்.

“அவர் எனக்கு உதவ அசிஸா ஷேரிடம் சென்றார். அதன் பிறகு நான் மோசமாக தாக்கப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டது. மற்ற பெண்களும் பயப்பட வேண்டும் என்பதற்காக இந்த வீடியோ மற்ற பெண்களிடமும் காட்டப்பட்டது” என்றார்.

தெஹ்மினா மீது குருகிராம் நீதிமன்றத்தில் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் (விசா இல்லாமல் இந்தியாவில் தங்கியதற்காக) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தான் இந்தியாவில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே, தரகர் தனக்கு எதிராக இந்த வழக்கைப் பதிவு செய்ததாக அவர் கூறுகிறார்.

  • உஸ்பெகிஸ்தான் சிறுமிகள் ஆட்கடத்தல்
மனிதக் கடத்தல்காரர்களை பிடிக்க காவல் ஆய்வாளர் பிரமோத் குமார் மற்றும் அவரது குழுவினர் ஒரு வருடமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

“வருமானம் இல்லை”

அசிஸா ஷேர் கைது செய்யப்பட்ட பிறகு தெஹ்மினாவுக்கு சற்று நிம்மதி கிடைத்துள்ளது. இதற்கு முன், அவர் எப்போதும் பயத்துடனேயே இருந்தார்.

“அது என்னை எப்போதும் பயமுறுத்தியது. நான் இன்னும் பயத்தில் இருக்கிறேன். என்னை தாக்கிய வீடியோவை வைரலாக்கினர்” என தெஹ்மினா கூறுகிறார்.

பாலியல் தொழிலில் ஈடுபட்டதால் தெஹ்மினாவின் உடல்நிலை மோசமடைந்தது. இதனால், அவர் கருப்பையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. மருத்துவமனையில் இருந்தபோது, ​​தான் முழுமையாக குணமடைவதற்கு முன்பே தனிமையில் விடப்பட்டதாகவும், மீண்டும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் தெஹ்மினா கூறுகிறார்.

தெஹ்மினா மற்றும் அஃப்ரோஸா போன்ற பெண்கள் சில நேரங்களில் ஒரு நாளில் ஆறு முதல் ஒன்பது வாடிக்கையாளர்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியான கடத்தல்காரர்கள் மற்றும் தரகர்களின் நாட்குறிப்புகளில் இருந்த பக்கங்களை பிபிசி பார்த்தது. இதில் இந்த சிறுமிகள் செய்யும் வேலை மற்றும் தினசரி லட்சக்கணக்கில் சம்பாதித்த கணக்கும் உள்ளது.

இந்தச் சம்பாத்தியத்தில் தங்களுக்குப் பங்கு கிடைக்கவில்லை என்றும், கடத்தல்காரர்களும், தரகர்களும் தங்களிடம் போலிக் கடன்களுக்காக வசூலித்ததாகவும் இந்தப் பெண்கள் கூறுகின்றனர்.

  • உஸ்பெகிஸ்தான் சிறுமிகள் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அஃப்ரோஸாவுக்கும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. “என் அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். எனக்கு பணம் தேவைப்பட்டது. ஆனால், எனக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. நான் 9 மாதங்கள் அசிஸாவின் கட்டுப்பாட்டில் இருந்தேன். அந்த நேரத்தில் எனக்கு பணம் கொடுக்கப்படவில்லை. உங்களுக்கு இன்னும் கடன் பாக்கி இருக்கிறது என்றே எப்போதும் கூறப்பட்டது” என்கிறார் அவர்.

அஃப்ரோஸா ஆகஸ்ட் 2022-இல் தப்பித்து உஸ்பெகிஸ்தான் தூதரகத்தில் உதவியை நாட முயன்றார்.

அவர் உதவி பெறுவதற்கு முன், தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கி முனையில் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து டெல்லி சாணக்யபுரி காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனது உடலில் பிளேடால் வெட்டப்பட்ட, சிகரெட்டால் எரிக்கப்பட்ட அடையாளங்களைக் காட்டிய அஃப்ரோஸா, “நான் பணம் கேட்டபோதெல்லாம் எனக்கு இத்தகைய அடையாளங்கள் கிடைத்தன” என்று கூறுகிறார்.

மனிதக் கடத்தல்காரர்கள் அஃப்ரோஸாவை நேபாளத்திற்கு அழைத்து வந்தபோது, ​​ஏற்கனவே தெஹ்மினா அவர்கள் பிடியில் இருந்தார்.

இதுகுறித்து தெஹ்மினா கூறுகையில், “வேலை வாங்கித் தருவதாக கூறி எனது முதலாளி பல்வேறு இடங்களில் பெண்களை தொடர்புகொண்டார். நான் விரும்பினாலும், அஃப்ரோஸா போன்ற பெண்களை எச்சரிக்க முடியவில்லை, ஏனென்றால் நான் அவ்வாறு செய்ய வழி இல்லை. என்னைப் போன்று ஏற்கனவே இந்த பிடியில் இருந்த பெண்கள், புதிய பெண்களிடமிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்” என தெரிவித்தார்.

  • உஸ்பெகிஸ்தான் சிறுமிகள் கடத்தல்
இந்த வலைப்பின்னலை உடைக்க இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்கிறார் ஹேமந்த் சர்மா

“இன்னும் தொடர்கின்றன”

இந்த சிறுமிகள் பாலியல் தொழில் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட டெல்லி பகுதிகளையும் பிபிசி பார்வையிட்டது. காவல்துறையின் நடவடிக்கைக்குப் பிறகு இத்தகைய சம்பவங்கள் குறைந்தாலும், இன்னும் தொடரவே செய்கின்றன.

கிழக்கு டெல்லியின் துணை காவல் ஆய்வாளர் அம்ரிதா குலிகோத் கூறுகையில், “இந்த மனிதக் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம், வேலை என்ற பெயரில் சிறுமிகளை இந்தியாவுக்கு அழைத்து வந்து பாஸ்போர்ட்டை பறித்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் இந்த வலைப்பின்னல் கண்டிப்பாக துண்டிக்கப்படும்” என்கிறார்.

“இது நிச்சயமாக வெளிநாடுகளில் இருந்து பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட வைக்கும் வேலையை பாதிக்கும்.”

அதேநேரத்தில், மனிதக் கடத்தலுக்கு எதிராக செயல்படும் அமைப்புகள் இன்னும் பல சவால்கள் இருப்பதாக நம்புகின்றன.

“பெண்கள் இந்தியாவிற்குள் நுழையும் நேபாள எல்லையில் தான் முதல் சவால். இந்த பெண்கள் விசா இல்லாமல் டெல்லிக்குள் நுழைகின்றனர்” என்கிறார் ஹேமந்த் சர்மா.

“இதற்குப் பிறகு, அவர்கள் டெல்லி மற்றும் பிற பெரிய நகரங்களில் பாலியல் தொழில் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இவை அனைத்தும் காவல்துறையின் பார்வையில் இருந்து எப்படி விலகிச் செல்கின்றன என்பதுதான் கேள்வி” என்கிறார் அவர்.

“இந்தப் பெண்களின் மறுவாழ்வு இரண்டாவது சவால். முன்னதாக, வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ், சிறுமிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, அங்கிருந்து தடுப்பு மையத்திற்கு அனுப்பப்படவில்லை” என்கிறார் ஹேமந்த் சர்மா.

“இந்தப் பெண்கள் இந்தியாவில் என்ன செய்வார்கள், அவர்கள் எங்கு வாழ்வார்கள், சட்ட நடவடிக்கை முடியும் வரை தங்கள் செலவுகளை எப்படி நிர்வகிப்பார்கள் என்று யோசிக்க வேண்டிய அவசியம் உள்ளது,” என்கிறார் அவர்.

  • உஸ்பெகிஸ்தான் சிறுமிகள் கடத்தல்
படக்குறிப்பு,மத்திய ஆசியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட சிறுமிகள் பாலியல் தொழிலில் ஈடுபடும் பகுதிகளை பிபிசி பார்வையிட்டது. இந்த நடவடிக்கைகள் தற்போது குறைந்துவிட்டன, ஆனால் இன்னும் தொடர்கின்றன.

தெஹ்மினா தனது நாட்டுக்குத் திரும்புவதற்காக காத்திருக்கிறார். ஆனால் அவருக்கு எதிராக வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் குருகிராம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தன்னை சிக்க வைக்கவே இந்த வழக்கு போடப்பட்டதாக கூறுகிறார்.

அதேசமயம் மனிதக் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்ட வழக்கில் அஃப்ரோஸா சாட்சியாக உள்ளார்.

மனிதக் கடத்தலுக்கு ஆளாகும் பெரும்பாலான சிறுமிகளுக்கு எதிராக வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை இல்லை. ஆனால், வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளதால், வழக்கு முடியும் வரை அவர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதி இல்லை. முதலில் சட்டப்படி அவர் இந்தியாவை விட்டு வெளியேற முடியாது.

இறுதி சாட்சியம் அளிக்கப்படும் வரை பாதிக்கப்பட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் வழக்குரைஞரான ஜுபைர் ஹாஷ்மி, பாதிக்கப்பட்ட பெண் எப்போது வேண்டுமானாலும் தனது நாட்டுக்குத் திரும்பலாம் என்று கூறுகிறார்.

“இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்ப வேண்டாம் என கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவில்லை. அதனால், அவர்கள் தடுத்து நிறுத்தப்படவில்லை” என்றார் ஜுபைர் ஹஷ்மி.

இருப்பினும், ஹேமந்த் சர்மா கூறுகையில், “குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட, பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியம் மிகவும் முக்கியமானது. குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்குரைஞர்கள் இந்த சாட்சியத்தை தள்ளிப்போட முயற்சிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் இந்த சட்டப் போராட்டத்தில் விரக்தியடைவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது” என்றார்.

அதேசமயம், அஃப்ரோஸாவும் தெஹ்மினாவும் தங்கள் நாட்டுக்குத் திரும்ப காத்திருக்கிறார்கள். “நான் என் நாட்டை அடைந்தவுடன், என் தாய் மண்ணை முதலில் முத்தமிடுவேன். இனி ஒருபோதும் நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று சத்தியம் செய்வேன்” என்று தெஹ்மினா கூறுகிறார்.

​​“நான் என் அம்மாவை கட்டிப்பிடித்து நீண்ட நேரம் அழுவேன். ஒவ்வொரு நாளும் நான் அவரை மிகவும் ’மிஸ்’ செய்கிறேன். என் அம்மாவை ஆரத்தழுவுவதே என் வாழ்க்கையில் பெரிய ஆசை,” என்கிறார் அஃப்ரோஸா.

மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவுக்கு எத்தனை சிறுமிகள் கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறித்த உறுதியான தகவல்கள் இல்லை. ஆனால் இந்த எண்ணிக்கை பல ஆயிரங்களில் இருக்கலாம் என்று ஆர்வலர்கள் நம்புகின்றனர்.

(பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்ட சிறுமிகளின் பெயர்கள் அவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க மாற்றப்பட்டுள்ளன.)

 பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *